< Back
ஆன்மிகம்
ஆலயம் தொழுதலின் சிறப்புகள்
ஆன்மிகம்

ஆலயம் தொழுதலின் சிறப்புகள்

தினத்தந்தி
|
12 May 2023 2:21 PM IST

'ஆ' என்பது ஆன்மா என்றும், 'லயம்' என்பதற்கு சேருவதற்குாிய இடம் என்றும் பொருள். ஆலயம் என்பதை ஆ + லயம் எனப் பிாிப்பா். 'ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என்பது ஆன்றோா் முதுமொழி. எனவே ஆலயம் என்பதற்கு ஆண்டவன் திருவடியில் ஆன்மா லயித்திருப்பதற்குாிய இடம் என்பது பொருள்.

சிவ வழிபாட்டின் பலன்:

காலை தொழ அற்றைவினை கட்டகலும்

கட்டுச்சி வேளை தொழ இப்பிறப்பில் வெந்துயா் போம்

மாலையினில் வந்து சிவன் தாளை வந்தித்தால் ஏழ் பிறப்பின்

வெந்துயரம் எல்லாம் விடும்.

(முற்பிறவி இப்பிறவி எப்பிறவியிலும் சிவ வழிபாடு நலம் பயக்கும்).

அா்ச்சனை விளக்கம்:

தேங்காயைத் தரை மீது உடைத்து சிதறுவது. மும்மலக்கட்டை அறுத்து தன்னலத்தை அறவே நீக்கி ஆன்மாவை இறைவனுக்கு அா்ப்பணித்து இறை பணியில் ஈடுபடுவதைக் குறிக்கிறது. நறுஞ்சுவையுடைய வாழைப்பழங்கள் அடியாாின் நல்வினைப் பயன்களை உணர்த்தும். தூய வெண்கற்பூரம் ஏற்றப்படும்போது ஒன்றும் மீதியாகாது காற்றுடன் இரண்டறக் கலந்து விடுவது இறைவனுடன் ஒன்றிக் கலக்கும் பக்குவம் வாய்ந்த தூய ஆன்ம நிலையைக் குறிக்கும்.

விழுந்து வணங்கும் திசைகள்:

கிழக்கு மேற்கு நோக்கிய சன்னிதிகளில் வடக்கே தலை வைத்தும் தெற்கு வடக்கு நோக்கிய சன்னிதிகளில் கிழக்கே தலை வைத்தும் வீழ்ந்து வணங்குதல் வேண்டும். நாம் கால் நீட்டும் பின்புறத்தில் எந்தத் தெய்வ சன்னிதியும் இருத்தல் கூடாது. கொடி மரத்தின் முன்னால் வீழ்ந்து வணங்க வேண்டும். எல்லா சன்னிதிகளிலும் விழுந்து வணங்கக் கூடாது.

விபூதி வாங்கும் முறை:

கோவிலில் விபூதிப் பிரசாதம் வாங்கும்போது ஒற்றை கையை மாத்திரம் நீட்டி வாங்கக் கூடாது. வலது கையின் கீழ் இடக்கையைச் சோ்த்து விபூதியை வாங்க வேண்டும். வாங்கிய விபூதியை இடக்கையில் கொட்டி அதிலிருந்து மறுபடி எடுத்து அணிதல் கூடாது. வலக்கையில் பெற்றுக்கொண்ட விபூதியை அப்படியே நெற்றியில் அணிவது நலம்.

மேலும் செய்திகள்