சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலில் பிரமோற்சவ விழா தொடங்கியது
|ஹம்ச வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், நாக வாகனம் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதிவலம் வந்து அருள்பாலிக்கிறார்.
கடலூர்:
கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி சிங்கிரிகுடியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரமோற்சவம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி காலையில் சுவாமிக்கு பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.பின்னர் ஸ்ரீதேவி பூதேவியுடன் லட்சுமி நரசிம்ம பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். அதன்பின் வேத மந்திரம் முழங்க பிரம்மோற்சவ கொடியேற்றம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கொடி மரத்திற்கும் சுவாமிக்கும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதையடுத்து பல்லக்கில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
பிரம்மோற்சவ நாட்களில் ஒவ்வொரு நாளும் இரவில் சுவாமி விதியுலா நடைபெறும். ஹம்ச வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், நாக வாகனம் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதிவலம் வந்து அருள்பாலிக்கிறார்.
விழாவின் சிகர நிகிழ்ச்சியான தேரோட்டம் 22-ந்தேதி நடைபெறுகிறது. அன்று காலையில் லட்சுமி நரசிம்ம பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெறும். இதனைத் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஊர்வலமாக கொண்டு வந்து தேரில் கம்பீரமாக எழுந்தருள்வார். பின்னர் அதிகாலை 4.30 மணி அளவில் தேரோட்டம் தொடங்கி முக்கிய மாட வீதிகளில் சென்று வந்து நிலையை அடையும்.