< Back
ஆன்மிகம்
சிங்கம்புணரி கோவில் தேரோட்டம்
ஆன்மிகம்

சிங்கம்புணரி கோவில் தேரோட்டம்

தினத்தந்தி
|
21 May 2024 1:10 PM IST

சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது.

சிவகங்கை,

சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட சிங்கம்புணரியில் உள்ள சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. இந்த விழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 5-ம் நாள் அன்று திருக்கல்யாண வைபவம் நடந்தது.

6-ம் நாள் அன்று கழுவன் திருவிழா நடைபெற்றது. அதிகாலை 2 மணியளவில் கருப்பு திருமேனியுடன் ஜடாமுடி அணிந்து கோர உருவத்துடன் கோவிலுக்கு அழைத்துக் கொண்டு தீவட்டி ஏந்திய உதவியாளர்களுடன் சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலுக்கு கழுவனை கயிற்றால் கட்டப்பட்டு அழைத்துவரப்பட்டார்.

அங்கு அமர்ந்திருந்த நாட்டார்களிடம் மரியாதை நிமித்தமாக வணங்கி சேவுகப்பெருமாள் சன்னதியில் அவருக்கு திருநீறு தீர்த்தம் சிவாச்சாரியார்களால் வழங்கப்பட்டு பரிவட்டம் கட்டி மரியாதை செய்தனர். முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் சேவுகப்பெருமாள் அய்யனார், பூர்ணா, புஷ்கலா தேவியருடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த விழாவில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

9 -ம் நாளான நேற்று திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, சுவாமிக்கு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டுப் பல மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் வந்திருந்து திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதிகளில் மக்கள் வெள்ளத்தில் தேர் ஆடி அசைந்து வந்தது.

நான்கு ரத வீதிகளில் உலா வந்து தேர் நிலையை அடைந்ததும் தேங்காய் உடைக்கும் நேர்த்திக்கடன் நிகழ்ச்சி நடந்தது. லட்சக்கணக்கில் தேங்காய்களை உடைத்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். நீண்ட நேரம் நடந்த இந்த தேங்காய் உடைப்பு நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான மக்கள் உற்சாகமாகக் கண்டுகளித்தனர்.

மேலும் செய்திகள்