துளசியால் அர்ச்சிக்கப்படும் சிவலிங்கம்
|சென்னை அடுத்த செங்கல்பட்டு அருகே உள்ளது, சிங்கப்பெருமாள் கோவில். இங்கிருந்து வல்லக்கோட்டை செல்லும் பாதையில் உள்ளது, துளசீஸ்வரர் திருக்கோவில். அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கங்களில் இதுவும் ஒன்று என்கிறது, தல புராணம்.
பவுர்ணமி அன்று, அர்த்த ஜாம வழிபாட்டு வேளையில், வெள்ளை அரளி மலர் சாத்தி, துளசியால் அர்ச்சனை செய்து வழிபட்டால் ஒளிமயமான வாழ்வு அமையும்.
சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் திருமணம் நடைபெற்றபோது, அதனைக் காண்பதற்காக அனைவரும் கயிலாயமலையில் குவிந்தனர். இதனால் வடக்கு பகுதி தாழ்ந்தும், தென் பகுதி உயர்ந்தும் காணப்பட்டது. உலகம் சமநிலையை அடைவதற்காக, குறுமுனிவரான அகத்தியரை, தென்பகுதிக்குச் செல்லும்படி சிவபெருமான் கட்டளையிட்டார். அதன்படி கயிலாயத்தில் இருந்து தென்பகுதிக்கு புறப்பட்டு வந்த அகத்தியர், வரும் வழியில் எல்லாம் சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இப்படி அவர் 108 லிங்கங்களை பிரதிஷ்டை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதில் ஒன்றுதான், இங்குள்ள துளசீஸ்வரர் என்ற பெயரில் உள்ள சிவலிங்கம். அகத்தியர் இந்தப் பகுதிக்கு வந்தபோது, சிவலிங்க பூஜை செய்ய நினைத்தார். ஆனால் இப்பகுதி முழுவதும் துளசிச் செடிகளால் சூழப்பட்டு இருந்தது. அப்போது அங்கு ஈசனின் அசரீரி கேட்டது. "அகத்தியா.. என்னைத் தேடி எங்கும் அலைய வேண்டாம். நான் இங்கே துளசிச் செடிகள் சூழ மறைந்திருக்கிறேன்" என்றார்.
ஈசனின் குரல் வந்த திசையை நோக்கி சென்ற அகத்தியருக்கு, துளசி செடிகளுக்கு இடையே, சுயம்பு லிங்கம் ஒன்று தென்பட்டது. அந்தப் பகுதியில் வேறு எந்த பூக்களும் கிடைக்க வாய்ப்பில்லாததால், துளசி இலைகளைக் கொண்டே இறைவனை அர்ச்சனை செய்து வழிபட்டார், அகத்தியப் பெருமான். சிவபெருமானும் தலைசாய்த்து அகத்தியரின் பூஜையை ஏற்றுக்கொண்டார். மேலும் சிவசக்தி வடிவமான அர்த்தநாரீஸ்வரர் தோற்றத்தில், அகத்தியருக்கு காட்சியளித்தார் என்கிறது தல வரலாறு.
பிற்காலத்தில் இங்கு ஈசனுக்கு ஆலயம் எழுப்பப்பட்டது. இன்றும் இத்தல இறைவனுக்கு துளசி இலை கொண்டுதான் அர்ச்சனை செய்கிறார்கள். பொதுவாக சிவபெருமானுக்கு வில்வ இலையால்தான் அர்ச்சனை செய்யப்படும், துளசி இலை என்பது, பெருமாளுக்கு உகந்தது. ஆனால் இங்கு சிவனுக்கு துளசி இலை அர்ச்சனை செய்யப்படுவது விசேஷமாக பார்க்கப்படுகிறது. துளசியை விரும்பி ஏற்றுக்கொண்டதால், இறைவனுக்கு 'துளசீஸ்வரர்' என்று பெயர். அதே நேரம் அம்பாளின் திருநாமம் 'வில்வநாயகி.' ஆனந்தவல்லி என்ற திருப்பெயரும் உண்டு.
துளசீஸ்வரரை திங்கட்கிழமை அன்று, துளசியால் அர்ச்சித்து வழிபட்டால் சிவனருள் கிட்டும். ஜாதகத்தில் சந்திரபலம் குறைந்திருப்பவர்கள், திங்கட்கிழமை அன்று சந்திர ஓரையில் இத்தல ஈசனை துளசியால் அர்ச்சித்து வழிபடலாம். இதனால் சந்திர தோஷம் விலகும். பவுர்ணமி அன்று, அர்த்த ஜாம வழிபாட்டு வேளையில், வெள்ளை அரளி மலர் சாத்தி, துளசியால் அர்ச்சனை செய்து வழிபட்டால் ஒளிமயமான வாழ்வு அமையும். மகாசிவராத்திரி அன்று இங்கு 4 கால பூஜை நடைபெறும். இதில் மூன்றாம் கால பூஜையில், இத்தல ஈசனை மகாவிஷ்ணு வழிபடுவதாக ஐதீகம்.
அமைவிடம்
செங்கல்பட்டு அருகில் உள்ள சிங்கப்பெருமாள்கோவில் என்ற ஊரில் இருந்து, ஒரகடம் செல்லும் மார்க்கத்தில் திருக்கச்சூர் என்ற ஊர் வரும். அங்கிருந்து இரண்டாக பிரியும் சாலையில் நேராகச் சென்றால், சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் கொளத்தூர் என்ற ஊரில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.