சக்தி வாய்ந்த எல்லம்மா ஆலயம்
|கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் இருந்து 70 கி.மீ தொலைவில் இருக்கும் பெலகாவி மாவட்டத்தில் அமைந்துள்ளது சவதத்தி எல்லம்மா கோவில்.
இந்த கோவில் ஸ்ரீ ரேணுகா எல்லம்மா கோவில் என அழைக்கப்படுகிறது. பக்தர்கள் தாங்கள் நினைத்தது நடக்க பிரார்த்தனை செய்து இந்த கோவிலுக்கு வந்தால் அது நிறைவேறும் என நம்புகின்றனர். பிப்ரவரி மாதம் வரும் அமாவாசை முதல் மார்ச் மாதம் வரும் அமாவாசை வரை 30 நாட்கள் உன்னிமே திருவிழா நடைபெறும். அப்போது தினமும் 2 லட்சம் முதல் 3 லட்சம் பக்தர்கள் இந்த கோவிலில் கூடுவர். இதில் 80 சதவீதம் பேர் மராட்டிய மாநிலத்தில் இருந்தும், 20 சதவீதம் பேர் கர்நாடகம், ஆந்திரா, தமிழ்நாடு, கோவா ஆகிய மாநிலங்களில் இருந்தும் வருவர். இந்த கோவிலில் பெண்களை சாமிக்கு நேர்ந்து விடுவர். இவர்கள் சாமிக்கு சொந்தமானவர்கள். இவர்களை தேவதாசிகள் என்று அழைப்பார்கள். இவர்களுக்கு முதலில் தாலி கட்டுபவர் இவருடைய கணவர். ஆனால் அவருக்கு இவர்கள் சொந்தம் இல்லை. ஆனால் இந்த தேவதாசி முறையை அரசு ஒழிக்க நடவடிக்கை எடுத்துள்ளதால் இப்போது வழக்கத்தில் இல்லை.
காஷ்மீர் ரேணுகா ராஜனின் மகள் எல்லம்மா. ரிஷி ஜமதக்கினி காஷ்மீர் சென்ற போது எல்லம்மாவை மணந்தார். பிறகு இருவரும் வந்து சவுதத்தி மலையில் தவம் இருந்தனர். இவர்களுக்கு 4 புத்திரர்கள். கடைசி புத்திரன் தான் பரசுராமர். தந்தை கட்டளையின் பேரில் தாய் எல்லம்மாவின் தலையை கொய்தவர். ஜமதக்கினி ரிஷி- ஈஸ்வரர் அவதாரம். எல்லம்மா -பார்வதி அவதாரம். தந்தையிடம் வரம் வாங்கி அம்மாவை உயிர் பெறச் செய்தார். ஜமதக்கினி ரிஷியும்- எல்லம்மாவும் தவம் செய்த இடம் என்பதால் இது சக்தி வாய்ந்த இடமாக கருதப்படுகிறது.