< Back
ஆன்மிகம்
புரட்டாசி மாத சனிக்கிழமை: கோட்டை பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
ஈரோடு
ஆன்மிகம்

புரட்டாசி மாத சனிக்கிழமை: கோட்டை பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு

தினத்தந்தி
|
24 Sept 2023 3:42 AM IST

புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி கோட்டை பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி கோட்டை பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

பிரம்மோற்சவ விழா

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக உள்ளதால், பக்தர்கள் விரதம் கடைபிடித்து வருகின்றனர். குறிப்பாக சனிக்கிழமை சிறப்பு வழிபாட்டில் ஈடுபடுவது வழக்கம். அதுபோல் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான நேற்று பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

ஈரோடு கோட்டையில் பிரசித்தி பெற்ற கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி மாதத்தையொட்டி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இந்தநிலையில் முதல் சனிக்கிழமையையொட்டி நேற்று முன்தினத்தில் இருந்தே கோவில்களில் வளாகம் அலங்கரிக்கப்பட்டது. இதையொட்டி 300 கிலோ செவ்வந்தி பூக்களால் மாலை தொடுக்கப்பட்டு, ஆங்காங்கே கட்டிவிட்டு அலங்கரிக்கப்பட்டது.

நீண்ட வரிசை

ஸ்ரீதேவி, பூதேவி சமேத கஸ்தூரி அரங்கநாதரின் உற்சவ சிலைகளுக்கு நேற்று அதிகாலையிலேயே சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலையில் இருந்தே பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை பக்தர்கள் தரிசனம் செய்தனர். கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையிலும் பெருமாளின் திருவீதிஉலா நடந்தது. இதில் கருட வாகனத்தில் எழுந்தருளிய பெருமாள், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல் ஈரோடு அருகே பெருமாள் மலையிலும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அங்கும் மலை படிக்கட்டு வழியாக பக்தர்கள் ஏறி சென்று பெருமாளை தரிசனம் செய்தனர். மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்