சங்கடம் தீர்க்கும் சரஸ்வதி வழிபாடு
|நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்க்கா தேவியையும், அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமியையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியையும் பூஜிப்பது உத்தமம்.
கிருத யுகத்தில் சுகேது என்ற ராஜா, நல்ல முறையில் ஆட்சி செய்து கொண்டிருந்தார். அவர் மனைவி சுதேவியும் மிகுந்த பக்தி கொண்டவளாகத் திகழ்ந்தாள். இவர்கள் மேல் பகை கொண்ட உறவினர்கள் ஒன்று சேர்ந்து, பெரும் படையுடன் வந்து போரிட்டனர். எதிர் பாராத உறவினர்களின் துரோகத்தால், போரில் சுகேது தோற்றுவிட்டார். தோல்வியின் காரணமாக சுகேது தன் மனைவியுடன் காட்டிற்குச் செல்ல நேரிட்டது. காட்டிற்குள் வசித்து வந்த ஆங்கிரஸ முனிவரை, சுகேதுவும் அவரது மனைவியும் சந்தித்து ஆசிபெற்றனர். அந்த தம்பதியரின் துன்பங்களை அறிந்த முனிவர், அவர்களை பஞ்சவடி என்ற ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர்களை நவராத்திரி அன்று கடைசி மூன்று நாட்கள் முறைப்படி சரஸ்வதியை பூஜிக்கச் சொன்னார். சுதேவி முறைப்படி மகா சரஸ்வதியை பூஜித்தாள். ஆங்கிரஸ முனிவருக்கு பலவித தானங்களும் செய்தார்கள். பின் மன்னனும் அவரது மனைவியும் அங்கேயே தங்கியிருந்தனர். அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஆங்கிரஸ முனிவர் அந்தக் குழந்தைக்கு, சூரிய பிரதாபன் எனப் பெயரிட்டார். அந்த பிள்ளை வளர்ந்து ஆங்கிரஸ முனிவரிடம் சகல கலைகளும் கற்று, சரஸ்வதி தேவி அருளால் தன் தந்தையின் எதிரிகளை போரில் வென்று இழந்த தேசத்தை மீண்டும் பெற்றான்.
நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்க்கா தேவியையும், அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமியையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியையும் பூஜிப்பது உத்தமம். இது முடியாவிட்டால் கூட கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியை மட்டுமாவது பூஜிக்க வேண்டும். புத்தகத்திலோ, படத்திலோ சரஸ்வதி தேவியை ஆவாகனம் செய்து, தியானித்து பூஜிக்க வேண்டும். இதுவும் முடியாவிட்டால் கடைசி நாளான ஒன்பதாவது நாளில் மட்டுமாவது சரஸ்வதியை கட்டாயம் பூஜிக்க வேண்டும்.
சரஸ்வதி பூஜை அன்று மாவிலைத் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட பூஜை அறையில், சரஸ்வதி படத்திற்கு சந்தனம், குங்குமம், பூவால் அலங்காரம் செய்ய வேண்டும். இருபக்கங்களிலும், மனையின் மீது புத்தகங்களை அடுக்கி வைத்து மலர்கள், சந்தனம், வஸ்திரம் ஆகியவற்றால் அலங்கரித்து, இசைக்கருவிகள் மற்றும் ஆயுதங்கள் வைத்து, சரஸ்வதி பூஜையை தொடங்க வேண்டும். மேலும், நவராத்திரி ஏழாவது நாள், மூல நட்சத்திரத்தில் சரஸ்வதியை ஆவாஹனம் செய்து, ஒன்பதாவது நாள் உத்திராடம் நட்சத்திரத்தில் பூஜையை முடிப்பது நன்மை தரும்.
மூல நட்சத்திர தீபம் என்பது நவராத்திரி சமயத்தில், சரஸ்வதியை ஆவாஹனம் செய்யும்போது ஏற்றும் ஒரு அகண்ட தீபம் ஆகும். இந்த தீபமானது சரஸ்வதி வழிபாடு முடியும் வரையிலும் (நவராத்திரி கடைசி மூன்று நாட்கள் வரை), அணையாமல் எரிந்து கொண்டிருக்க வேண்டும். மூல நட்சத்திரத்தன்று காலையில் குளித்து தூய ஆடை அல்லது புதிய ஆடை அணிந்து கொண்டு, பூஜை அறையை சுத்தம் செய்து, சரஸ்வதி படத்திற்கு முன்பாக கோலம் போட வேண்டும். அதன் மீது சிறிய மரப் பலகை அல்லது தட்டு வைத்து அதில் அரிசியை பரப்பிவைக்க வேண்டும். அதன் மீது விளக்கு வைத்து ஏற்றி பூ போட்டு வணங்க வேண்டும். நெய் தீபம் ஏற்றலாம். ஆனால் மூன்று நாட்களும் அது எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதால், நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது சிறப்பு. விளக்கு அணையாமல் இருக்க திரியை தூண்டிவிட வேண்டும். இரவில் படுப்பதற்கு முன்பு திரியின் மேல் பாகத்தை சுத்தம் செய்து எண்ணெய் ஊற்ற வேண்டும். ஒரு வேளை தீபம் அணைந்து இருந்தால் காலையில் குளித்து விட்டு ஏற்றுவது நல்லது.
ஞாபக சக்திக்கு..
ஓம் ஹ்ரீம் ஐம் நமோ பகவதி ஐம் வத வத வாக்வாதின்யை ஸ்வாஹா. இந்த சரஸ்வதி மந்திரத்தை தினமும் 108 அல்லது 28 முறை சொல்லி வர, எந்த தேவி மந்திரங்களும் எளிதில் சித்திக்கும். ஞாபக சக்தி அதிகரிக்கும். சபையில் வெற்றி கிட்டும்.
வித்தைகளை கற்க..
'ஓம் ஹ்ரீம் ஐம் அம் ஆம் இம் ஈம் உம் ஊம் ர்ரும் ர்ரூம் ல்லும் ல்லூம் ஏம் ஐம் ஓம் ஒளம்,கம் க்கம் கம் க்கம் ஙம் சம் ச்சம் ஜம் ஜ்ஜம் ஞம் டம் ட்டம் டம் ட்டம் ணம் தம் த்தம் தம் த்தம் நம் பம் ப்பம் பம் ப்பம் மம் யம் ரம் லம் வம் ஸம் ஷம் ஸம் ஹம் ளம் க்ஷம் அக்ஷமாலே அக்ஷ்ர மாலிகா ஸமலங் க்ருதே வத வத வாக்வாதி நீ ஸ்வாஹா'.
இந்த சரஸ்வதி தேவி மாலா மந்திரத்தை தினமும் மூன்று முறை சொல்லி வர, சகல வித்தைகளும் எளிதில் கற்க முடியும்.
வறுமை நீக்கும் பாடல்
குமரகுருபரர் காசி சென்று சிவ தரிசனம் செய்தார். அப்போது அந்த பகுதியை ஆளும் மன்னரிடம் சிவாலயத்தை புதுப்பிக்க பெரிய பொருளை எதிர்பார்த்தார். அதற்கு அந்த மன்னன், என்னுடைய மொழியில் பேசினால் தேவையான உதவியைச் செய்வதாக கூறினான். இதை அறிந்த குருபரர், கலைவாணியின் அருளை நாடி பாடிய பாடல் இது.
'மண் கண்ட வெண் குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென்
பண் கண்டன விற் பணியச் செய்வாய் படைப்போன் முதலாம்
விண் கண்ட தெய்வம் பல கோடி உண்டெனினும் விளம்பின
உன் போல் கண்கண்ட தெய்வமுளதோ சகல கலாவல்லியே'
இவ்வாறு கலைவாணியின் அருள்பெற்று, சிம்ம வாகனத்தில் சென்று காசி மன்னனிடத்தில் அவன் மொழியிலேயே உரையாடி தன் காரியத்தை நிறைவேற்றிக் கொண்டார் குமரகுருபரர். இந்த பாடலை தொடர்ந்து பாடி வந்தால், வறுமை ஒழியும்.