திருவண்ணாமலையில் பவுர்ணமியையொட்டி 4 மணி நேரம் வரிசையில் நின்று சாமி தரிசனம்
|திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பவுர்ணமியையொட்டி 3 -வது நாளாக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் சுமார் 4 மணி நேரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை:
பஞ்ச பூதஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி மட்டுமின்றி விஷேச நாட்களில் ஏராளமான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் கிரிவலம் செல்வார்கள்.
ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் இக்கோவிலில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி மாலை 6.25 மணியளவில் பவுர்ணமி தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை 4.35 மணி வரை நிறைவடைந்தது. பவுர்ணமியையொட்டி கடந்த 9-ந் தேதி முதல் திருவண்ணாமலையில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் உள்ளனர். மேலும் கோவிலிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து 3-வது நாளாக நேற்றும் திருவண்ணாமலையில் பக்தர்கள் பலர் கிரிவலம் சென்றனர். கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். வரிசையில் காத்திருக்க முடியாமல் சிலர் இடையில் நுழைவதற்காக இரும்பு தடுப்பு கம்பிகள் மேல் ஏறி இறங்கி சென்றனர். இதனால் வரிசையில் வந்த பக்தர்கள் ஆத்திரம் அடைந்து கூச்சலிட்டனர். இதையடுத்து கோவில் பணியாளர்கள் வந்த அதனை சரி செய்தனர். இதனால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.