தோஷங்களைப் போக்கும் வழிபாடுகள்
|பூலோகநாத சுவாமி கோவிலில் நடைபெறும் வாஸ்து பூஜையில் கலந்து கொண்டால், வாஸ்து தோஷம் நீங்கும்.
* ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து பவானி செல்லும் பாதையில் உள்ளது பருவாச்சி கிராமம். இங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் பாளையம் மாரியம்மன் கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தில் மாசி மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமையில் நடைபெறும் பிரார்த்தனை பிரசித்தி பெற்றது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள், இந்த ஆலயத்தைச் சுற்றி விடிய விடிய நடப்பார்கள். நினைத்த காரியம் நிறைவேறவும், இல்லத்தில் உள்ள பிரச்சினைகள் விலகவும் இந்த பிரார்த்தனை செய்யப்படுகிறது.
* பொதுவாக ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்தி வழிபடுவார்கள். ஆனால் காஞ்சிபுரம் அடுத்துள்ள திருமுக்கூடலில் உள்ள வெங்கடேசப் பெருமாள் கோவிலில் அருள்பாலிக்கும் ஆஞ்சநேயருக்கு, வடை மாலைக்கு பதிலாக தேன்குழல் மாலை சாத்தப்படுகிறது. இந்த மாலை அணிவித்து அனுமனை வழிபட்டால், கடன் பிரச்சினை அகலும் என்கிறார்கள்.
* வீட்டில் வாஸ்து தோஷம் உள்ளவர்கள், திருச்சியில் இருந்து கீழபுலிவார் செல்லும் சாலையில் அமைந்துள்ள பூலோகநாத சுவாமி கோவிலில் நடைபெறும் வாஸ்து பூஜையில் கலந்து கொண்டால், அந்த தோஷம் நீங்கும்.
* கும்பகோணம் அடுத்துள்ள இன்னம்பூர் எழுத்தறிநாதர் ஆலயத்தில், குச்சியில் தேனை தொட்டு நாக்கில் எழுதும் நடைமுறை உள்ளது. சரியாக பேச்சு வராத குழந்தைகளுக்கு இவ்வாறு செய்யப்படுகிறது. இதன் மூலம் விரைவிலேயே அந்தக் குழந்தைகள் சரியான உச்சரிப்புடன் பேசுவதாக நம்பிக்கை நிலவுகிறது.
* திருவாரூர் அருகே உள்ள வீரவாடியில் வீரபத்திரருக்கு ஆலயம் உள்ளது. இங்கு வீரபத்திரருக்கு, வெற்றிலை மாலை, வில்வ மாலை சாத்தி, நைவேத்தியமாக தயிர் சாதம் படைத்து வழிபடுகிறார்கள். இதனால் செவ்வாய் தோஷம் நீங்குகிறதாம்.
* கிருஷ்ணகிரி மாவட்டம் கோட்டையூரில் 'நூற்று ஒன்று சாமிமலை' என்ற இடம் உள்ளது. இந்த மலையில் உள்ள ஒரு குகையில் ஓரடி உயரம் உள்ள கல் அகல் விளக்கு இருக்கிறது. இந்த விளக்கில் எண்ணெய்க்கு பதிலாக இளநீர் விட்டு தீபம் ஏற்றுகிறார்கள். இதனால் துன்பங்கள் விலகி, மன அமைதி கிடைக்குமாம்.
* திருப்போரூரில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, காட்டூர். இங்கு தையல் நாயகி உடனாய வைத்தியலிங்கேஸ்வரர் கோவில் இருக்கிறது. இத்தலத்தில் உள்ள தையல் நாயகிக்கு, தொடர்ச்சியாக மூன்று வெள்ளிக்கிழமைகள், நெய் விளக்கேற்றி வழிபட்டால் கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் நிகழும் என்பது நம்பிக்கை.
* தர்மபுரியில் உள்ள கல்யாண காமாட்சி அம்மனுக்கு ஆடிப்பூரத்தில் வளையல் சூட்டும் நிகழ்வு நடைபெறும். அப்போது அம்மனின் மடியில் முளைப்பயிறு கட்டுவார்கள். குழந்தை வரம் வேண்டுவோர், அந்த முளைப்பயிறு பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டால், விரைவில் குழந்தைப் பேறு உண்டாகும் என்கிறார்கள்.
* சுவாமிமலை முருகப்பெருமான் ஆலயத்தில் உள்ள இரண்டாம் பிரகாரத்தில், 'நேத்ர விநாயகர்' என்ற பெயரில் பிள்ளையார் அருள்பாலிக்கிறார். இவரை வழிபட்டால் கண் சம்பந்தமான நோய்கள் தீரும்.
* மன்னார்குடியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது, வடபாதிமங்கலம். இங்குள்ள சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் உள்ள சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்கிறார். இவருக்கு வியாழக்கிழமைகளில் அபிஷேகம் செய்து வழிபட்டால், வெளிநாடு செல்ல வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறும்.
* காஞ்சிபுரம் காந்தி ரோட்டில் உள்ள மூங்கில் மண்டபம் அருகே வழக்கறுத்தீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலயத்தில் 16 வாரங்கள் தொடர்ச்சியாக விளக்கேற்றி வழிபட, பிரச்சினைக்குரிய வழக்குகளில் வெற்றி கிட்டும்.
* திருவொற்றியூரில் இருந்து செங்குன்றம் செல்லும் பாதையில் உள்ளது, விளாங்காடு பாக்கம். இங்கு இலபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த ஆலய இறைவனான இலபுரீஸ்வரை வழிபட்டால், பிரிந்த தம்பதியர் இணைவார்கள் என்பது ஐதீகம். ராமபிரானின் மகன்களான லவனும், குசனும், தங்களின் தாய் தந்தையான ராமரும், சீதையும் இணைவதற்காக இத்தல இறைவனை பூஜித்துள்ளனர்.