பாலி தீவில் வித்தியாசமான வழிபாடு
|பாலியில் உள்ள இந்து கோவில்களுக்குள் நுழைய வேண்டும் என்றால், ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் வேட்டி, சட்டை அணிந்திருக்க வேண்டும்.
இந்தோனேசியாவில் அமைந்துள்ள, ஒரு தீவுப் பகுதி பாலி. இங்கு வாழும் 93 சதவீதம் மக்கள் இந்து சமயத்தைப் பின்பற்றுபவர்கள். உலகின் அழகிய தீவுகளில், பாலி தீவுக்கு முக்கிய இடம் உண்டு. இந்த தீவில் நெல் வயல்கள் அதிகம். இங்கு விவசாயமாக, நெற்பயிர்தான் பிரதானம். அனைத்து வயல்களிலும் ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய தெய்வங்களுக்கு தனியாக சிறிய இடம் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த இரு தெய்வங்களையும் வழிபட்ட பிறகுதான், விவசாய தொழிலை தொடங்கு வார்கள்.
பாலியில் உள்ள இந்து சமய கலாசாரம், வேதங்களில் இடம் பெற்றுள்ள ரிஷிகளிடம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நம் புராணங்களில் வரும் மார்க்கண்டேயர், அகஸ்தியர், பரத்வாஜர் போன்ற ரிஷிகளைப் பற்றி பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அங்கு பள்ளிகளில், இந்த ரிஷி களைப் பற்றிய பாடங்கள் இருக்கின்றன. அனைத்து பள்ளிகளிலும் மூன்று வேளை காயத்ரி மந்திரம் சொல்லப்படுகிறது. அதோடு சூரிய நமஸ்காரமும் முக்கியத்துவம் பெறுகிறது. மூன்று வேளையும் சூரிய நமஸ்காரம் செய்யும் நேரத்தைக் குறிப்பிடும் வகையில் பள்ளியில், ஒலி எழுப்பப்படுகிறது.
பாலியில் உள்ள இந்து கோவில்களுக்குள் நுழைய வேண்டும் என்றால், ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் வேட்டி, சட்டை அணிந்திருக்க வேண்டும். ஏனெனில் அந்த தீவின் தேசிய உடை, வேட்டி தான். பாலி தீவில் வசிக்கும் மக்கள் பூஜை செய்யும் போது, மந்திரங்கள், துதிகளை படிக்க புத்தகங்கள் வைத்திருப்பதில்லை. அவர்கள் இப்போதும் ஓலைச்சுவடியைத்தான் பயன்படுத்துகிறார்கள். பெரும் திரு விழாக் காலங்களில், இந்த ஓலைச்சுவடிகளை ஊர்வலமாக எடுத்துச் ெசல்லும் பழக்கம் இருக்கிறது.
இந்தோனேசியாவில் மிக முக்கிய நிகழ்வாக இருப்பது, 'நெய்பி டே' (Nyepi day). இதனை 'அமைதி, உண்ணாவிரதம், தியானம்' ஆகியவற்றின் நாள் என்கிறார்கள். ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் வரும் குறிப்பிட்ட ஒரு நாளில், இந்த விரதத்தை பாலி மக்கள் மேற்கொள்கிறார்கள். பாலி இன மக்களின் மன, மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், இந்த நாள் முழுவதும் இந்தோனேசியாவில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப் படுகின்றன. இந்தோனேசியா முழுவதும் விடுமுறையும் அளிக்கப்படுகிறது.
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை, எந்த போக்குவரத்தும் இருக்காது. அன்றைய தினம் பாலியில் உள்ள ஒரே ஒரு விமான நிலையமும் நாள் முழுவதும் மூடப்பட்டிருக்கும். மற்ற பொழுதுபோக்கு கிடையாது. வீட்டில் இருப்பவர்களும் கூட தொலைக்காட்சி, ரேடியோவை சத்தமாக வைத்துக் கேட்கக் கூடாது. ஒலி குறைவாக, வீட்டில் இருப்பவர்களுக்கு மட்டுமே கேட்கும்படியாக இருக்க வேண்டும். இது இந்துக்களுக்கான பண்டிகை என்றாலும், பிற மதத்தவர்களுக்கும் இந்தக் கட்டுப்பாடு பொருந்தும். இவ்வளவு ஏன், சுற்றுலாவாக அங்கு செல்பவா்கள் கூட, ஓட்டல்களுக்குள் விரும்பியபடி இருக்கலாமே தவிர, கடற்கரை மற்றும் தெருக்களில் நடமாட அனுமதி கிடையாது. பிரசவிக்க இருக்கும் பெண்கள், உயிருக்கு ஆபத்தான நிலைமையில் உள்ளவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு மட்டுமே கட்டுப்பாட்டு தளர்வு உண்டு.
இந்த நாளுக்கு மறுநாள் பாலி இன மக்கள், புத்தாண்டைக் கொண்டாடுகிறார்கள். இந்த நாளில் சில சடங்குகளை பாலி மக்கள் செய்கிறார்கள். தங்கள் இருப்பிடம் அருகில் உள்ள கடற்கரையில் இந்த சடங்கு செய்யப்படுகிறது. அனைத்து பகுதிகளிலும் உள்ள ஆலயங் களின் புனித பொருட்களைத் தூய்மைப்படுத்தவும், கடலில் இருந்து புனித நீரைப் பெறவும், தீய சக்திகளை அழிக்கவும், மனிதகுலம் மற்றும் இயற்கையுடன் சமநிலையை உருவாக்கவும் இதனைச் செய்கிறார்கள். இந்த சடங்கில் விலங்குகள் பலியிடும் பழக்கமும் இருக்கிறது. அப்போது பாலி மக்கள், எதிர் மறையான சக்திகள், புராணங்களில் வரும் அசுரர்களைக் குறிக்கும் வகையில், மூங்கில், துணி போன்ற பொருட்களால் உருவாக்கப்பட்ட உருவங்களை செய்து, ஊர்வலமாக எடுத்துச் சென்று எரிக்கும் வழக்கத்தைப் பின்பற்றுகின்றனர்.
பாலி இன மக்கள் தங்களின் புத்தாண்டை வரவேற்கும் அந்த நாளில், இந்தியாவில் மகாராஷ்டிராவில் வாழும் இந்துக்கள் 'குடிபத்வா' என்ற பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். மராத்தி மக்கள், தங்கள் காலண்டரின் ஆண்டு தொடக்கமாக 'செட்டி சந்த்' என்று அந்நாளை சிறப்பிக்கின்றனர். மணிப்பூரில் 'சஜிபு நோங்மா பண்பா' என்ற பெயரில் புத்தாண்டும், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் புத்தாண்டின் தொடக்கமாக 'யுகாதி' பண்டிகையும் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.