ராமேசுவரம் கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழா: திரளான பக்தர்கள் தரிசனம்
|தொடர் விடுமுறை காரணமாக நேற்று ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
ராமேசுவரம்,
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் தல வரலாற்றை விளக்கும் ராமலிங்க பிரதிஷ்டை விழா நடப்பது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு ராமேசுவரம் கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழா கடந்த 14-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் முதல் நாள் அன்று ராவண சம்ஹார நிகழ்ச்சியும், 2-வது நாளில் விபீஷணர் பட்டாபிஷேகமும் நடைபெற்றது.
முக்கிய நிகழ்ச்சியாக நேற்று கோவிலின் விஸ்வநாதர் சன்னதி முன்பு புனித நீர் அடங்கிய கலசம் வைக்கப்பட்டு ஸ்நான கலச பூஜை நடைபெற்றது. தொடர்ந்து கலசத்தை கோவில் குருக்கள் சுமந்தபடி மேள, தாளம் முழங்க சாமி பிரகாரத்தை சுற்றி வந்தனர். பின்னர் கருவறையில் உள்ள ராமநாதசுவாமிக்கு பால், பன்னீர், சந்தனம், திரவியம், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து கோவிலின் விஸ்வநாதர் சன்னதியில் இருந்து கோவில் குருக்கள் சந்தோஷ், ஆஞ்சநேயர் வேடம் அணிந்து சுவாமி விக்ரகத்தை தோளில் சுமந்து பிரகாரத்தை சுற்றி ஆடியபடி வலம் வந்தார். பின்னர் கோவில் குருக்கள் கருவறை உள்ளே சென்று சுவாமி விக்ரகத்தை வைத்தபின்பு சிறப்பு தீபாராதனை பூஜைகள் நடந்தன.
இந்த விழாவில் கோவில் இணை ஆணையர் சிவராம் குமார், பேஸ்கார் கமலநாதன், இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார், பிரபாகரன், காசாளர் ராமநாதன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவை முன்னிட்டு கோவிலின் கருவறை மண்டபம் மற்றும் எதிரே உள்ள சாமி சன்னதி பிரகாரமும் பல்வேறு இடங்களில் மலர் தோரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. தொடர் விடுமுறை காரணமாக நேற்று ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
திருவிழாவில் நேற்று இரவு சுவாமி-அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளி ரத வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.