ராம நவமி 2024: பகவான் ஸ்ரீராமருக்கு உகந்த எளிய நைவேத்தியம்
|ராம நவமி தினத்தில் ராமர் கோவில்களில் நடைபெறும் பட்டாபிஷேகத்தை கண்டுகளிக்கலாம்.
அயோத்தி மன்னன் தசரதன் புத்திர காமேஷ்டி யாகம் நடத்தி, அந்த யாகத்தின் பயனாக நான்கு மைந்தர்களைப் பெற்றெடுத்தார். முதல் மைந்தனாக நவமி திதியில் அவதரித்தார் ஸ்ரீ ராமன். அடுத்ததாக பரதன், சத்ருக்கன், லட்சுமணன் ஆகியோர் அவதரித்தனர்.
ஸ்ரீ ராமன் அவதரித்த நன்னாள், ராம நவமி திருநாளாக வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் ராம நவமி விழா நாளை கொண்டாடப்படுகிறது. மகிமை தரும் ராம நவமி அன்று அதிகாலை எழுந்து நீராடி, வீட்டில் பூஜை அறையை சுத்தம் செய்து, அலங்கரித்து, பட்டாபிஷேக ராமர் படத்துக்குப் பூக்களை சூடி நைவேத்தியங்களைப் படைத்து, ஸ்ரீ ராம நாமம் சொல்லி பூஜிக்க வேண்டும்.
ராம நவமியில் ராமனுக்கு நைவேத்தியமாக நீர்மோர் படைப்பது மிக முக்கியமாகும். ராஜரிஷி விசுவாமித்திரருடன் இருந்தபோதும், அதன்பின், பதினான்கு ஆண்டுகள் வனவாசத்தின்போதும், எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார். நீர்மோரையும், பானகத்தையும் தாகத்திற்காக அருந்தினார். அதன் நினைவாகவே, நீர்மோரும், பானகமும் ஸ்ரீ ராமனின் அவதார தினமான ஸ்ரீ ராம நவமி அன்று நிவேதனப் பொருட்களாகப் படைக்கப்படுகின்றன. இந்த எளிய நைவைத்தியத்தை படைத்து வழிபட்டாலே போதும், ஸ்ரீராமபிரான் மனம் குளிர்ந்து பக்தர்களுக்கு தனது அருளாசிகளை வாரி வழங்குவார்.
இதுதவிர, ராம நவமி நாளில் வெண்பொங்கல், பருப்பு வடை போன்றவற்றையும் நிவேதனம் செய்து, பிரசாதமாக சாப்பிடுவார்கள். ஸ்ரீ ராமன் எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டதால், அவருடைய பிறந்த நாளில் எளிய பானங்களான நீர்மோர், பானகம் தானமாக வழங்கலாம். விசிறி, செருப்பு, குடை போன்றவைகளையும் தானமாக கொடுக்கலாம்.
பெரிய அளவில் நைவேத்தியம் படைக்கவேண்டும் என்பதில்லை. ராமர் பட்டாபிஷேக படத்தின் முன்பாக வாழைப்பழம், பால் போன்ற எளிய பொருட்களை அர்ப்பணித்தும், ஸ்ரீ ராம நாமம் சொல்லியும் ஸ்ரீ ராமனை வணங்கி அருள் பெறலாம்.
ராமரை பற்றிய நூல்களை படித்தும், அவரது துதியை பாராயணம் செய்வதுமாக இருப்பது நன்மை அளிக்கும். அன்றைய தினம் ராமர் கோவில்களில் நடைபெறும் பட்டாபிஷேகத்தை கண்டுகளிக்கலாம். ராம நவமி நாளில் காலையில் உணவு எதுவும் சாப்பிடாமல் விரதம் இருந்து, ராமபிரானை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்சநேயரின் அருட்பார்வை கிட்டும்.