< Back
ஆன்மிகம்
ராகு-கேது பரிகாரத்தலங்கள்
ஆன்மிகம்

ராகு-கேது பரிகாரத்தலங்கள்

தினத்தந்தி
|
24 Feb 2023 8:05 PM IST

நவகிரகங்களில் ராகு பகவானை யோகக்காரகன் என்று அழைப்பர் யோகக் காலத்தை உருவாக்குபவரே ராகுதான்.

ஸ்ரீகாளஹஸ்தி

சென்னையில் இருந்து 110 கி.மீ. தொலைவிலும், திருப்பதியில் இருந்து 40 கி.மீ. தொலைவிலும் உள்ள புகழ்பெற்ற ராகு-கேது தலம் இது. இத்தல இறைவன் 'காளத்திநாதர்' என்றும், அம்பாள் 'ஞானப்பூங்கோதை' எனும் திருப்பெயரோடும் எழுந்தருளியுள்ளனர்.

கீழப்பெரும்பள்ளம்

மயிலாடுதுறை மற்றும் சீர்காழியில் இருந்து இத்தலத்தை அடையலாம். மூலவர் நாகேஸ்வரர். கேது பகவானுக்குரிய பரிகாரத்தலமாக விளங்குகிறது.

திருநாகேஸ்வரம்

கும்பகோணத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது. நாகேஸ்வரரையும், பிறையணிவாணுதலாள் அம்மனையும், இரண்டாம் பிராகாரத்திலுள்ள நாகராஜரையும் வணங்கி தோஷம் நீங்கப்பெறலாம்.

கும்பகோணம்

நகரின் மையத்திலேயே அமைந்துள்ள நாகேஸ்வரா் கோவிலில் அருள்பாலிக்கும் நாகேஸ்வரரும், பெரியநாயகியும் தோஷம் விலக்கி நன்மை அருள்கிறார்கள். ஆதிசேஷன் வழிபட்ட தலம் இது.

பாமணி

மன்னார்குடிக்கு வடக்கே 3 கி.மீ. தொலைவிலுள்ள இத்தலத்தில் நாகநாதரும் (சுயம்புலிங்கம்), அமிர்தநாயகியும் அருள்புரிகிறார்கள். பாதாளத்திலிருந்து ஆதிசேஷன் தோன்றி வழிபட்டதால் 'பாதாளீச்சரம்' என்றும் இத்தலத்தை அழைப்பார்கள்.

திருப்பாம்புரம்

கும்பகோணம் அல்லது மயிலாடுதுறையில் இருந்து பேரளம் வழியாக இத்தலத்தை அடையலாம். இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் பாம்புரேஸ்வரரையும், வண்டார்பூங்குழலியையும் தரிசிக்க தோஷங்கள் எல்லாம் விலகி ஓடுகின்றன. ஆதிசேஷன் வழிபட்ட தலம் இது.

ஸ்ரீவாஞ்சியம்

கும்பகோணம் அல்லது மயிலாடுதுறையில் இருந்து நன்னிலம் வழியாக இத்தலத்தை அடையலாம். ராகுவும் கேதுவும் சேர்ந்திருக்கும் அரியகோலத்தை இங்கு தரிசிக்கலாம்.

நாகூர்

நாகப்பட்டினத்திற்கு அருகே உள்ள இத்தலத்தில் நாகவல்லி சமேத நாகநாதராக இறைவன் அருள்பாலிக்கிறார். நாகராஜன் பூஜித்து பேறுபெற்ற தலம் இது.

பேரையூர்

புதுக்கோட்டைக்கு அருகேயுள்ள திருமயத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது, இத்தலம். மூலவராக நாகநாதரும், அம்மன் பிரகதாம்பாள் எனும் திருப்பெயரோடும் திகழ்கிறார்கள். நாகராஜன் பூஜித்த தலம் இது.

நயினார்கோவில்

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. சவுந்தரநாயகி சமேத நாகநாதராக இங்கு இறைவன் அருள்பாலிக்கிறார்.

நாகமுகுந்தன்குடி

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் இருந்து வடமேற்கே 5 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது, இந்த ராகு-கேது தோஷ நிவர்த்தி தலம்.

நாகப்பட்டினம்

காயாரோகணேஸ்வரர் எனும் இத்தல இறைவனை ஆதிசேஷன் பூஜித்து மகிழ்ந்தார். அம்பாளுக்கு நீலாயதாட்சி என்று பெயர்.

குன்றத்தூர்

சென்னையை அடுத்து, பூவிருந்தவல்லிக்கு அருகேயுள்ள இத்தலத்தில் காமாட்சி அம்மன் சமேதராக அருள்பாலிக்கும் நாகேஸ்வரர், சர்ப்ப தோஷங்களை நீக்கி ஆனந்தம் அளிக்கிறார்.

கெருகம்பாக்கம்

சென்னை போரூர்-குன்றத்தூர் பாதையில் உள்ளது கெருகம்பாக்கம். போரூர் சந்திப்பிலிருந்து 3 கி.மீ தொலைவு. நீலகண்டேஸ்வரர், ஆதிகாமாட்சி எனும் திருப்பெயர்களோடு இறைவனும், இறைவியும், பக்தர்களுக்கு தோஷம் விலக்கி அருள்கின்றனர்.

கோடகநல்லூர்

திருநெல்வேலியில் இருந்து மேற்கே 13 கி.மீ. தொலைவிலுள்ள இத்தலத்தில், காளத்தீஸ்வரர் எனும் திருநாமத்தோடு இறைவன் அருள்பாலிக்கிறார்.

திருக்களாஞ்சேரி

மயிலாடுதுறை, தரங்கம்பாடிக்கு அருகேயுள்ள இத்தலத்தில் மூலவர் நாகநாதர் சுயம்புலிங்கமாக அருள்பரப்பி தோஷம் நீக்குகிறார்.

ஆம்பூர்

வேலூர், வாணியம்பாடிக்கு அருகில் இத்தலம் உள்ளது. அபயவல்லி, நாகரத்தினசுவாமி எனும் திருப்பெயர்களோடு இறைவியும், இறைவனும் அருள்பாலிக்கின்றனர்.

மேலும் செய்திகள்