வேண்டிய வரம் அருளும் ராகவேந்திர சுவாமிகள்
|கேட்பதை கேட்டபடி வழங்கும் மத்வ குருவான ராகவேந்திர சுவாமிகள் சன்னியாசம் ஏற்று 402 ஆண்டுகள் ஆகின்றது.
கி.பி. 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர், ராகவேந்திர சுவாமிகள். குறிப்பாக சொல்வதென்றால் 1595-ம் ஆண்டு திம்மண்ண பட்டர் - கோபிகாம்பாள் தம்பதியருக்கு மூன்றாவது பிள்ளையாக அவதரித்தார். இவரது இயற்பெயர் வெங்கடநாதன் என்பதாகும். தமிழ்நாட்டில் சிதம்பரம் மாவட்டம் புவனகிரியில் பிறந்த வெங்கடநாதனுக்கு வெங்கடம்மாள் என்ற சகோதரியும், குருராஜன் என்ற சகோதரரும் உண்டு. சிறு வயதிலேயே தந்தையை இழந்த வெங்கடநாதன், அதன் பின்னர் தன்னுடைய சகோதரரான குருராஜனின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார்.
சிறு வயதிலேயே கல்வி கற்கும் புலமை அதிகம் பெற்றிருந்த வெங்கடநாதரை, கும்பகோண ஸ்ரீ மடத்தில் இருக்கும் ஸ்ரீ சுதீந்திர தீர்த்தரிடம் கல்வி கற்பதற்காக அனுப்பிவைத்தாா், குருராஜன். அங்கு வேதங்களை நன்கு கற்றுத் தேர்ந்த வெங்கடநாதன்,ஸ்ரீ சுதீந்திர தீர்த்தரின் அன்புக்குரிய சீடராகவும் மாறினார். வேதங்கள் தொடர்பான விவாதங்கள் பலவற்றில் பங்கேற்று, அதில் சிறப்பான வெற்றியைப் பெற்று, தன்னுடைய குருவுக்கு பெருமை சேர்த்தார். இந்த நிலையில் அவரது வீட்டில் உள்ளவா்கள், வெங்கடநாதனுக்கு திருமணம் ெசய்ய ஏற்பாடு செய்தனர். அதன்படி சரஸ்வதிபாய் என்ற பெண்ணை தேர்வு செய்து, வெங்கடநாதனுக்கு திரு
மணம் செய்து வைத்தனர். இவர்களின் இல்லற வாழ்க்கையின் பயனாக, லட்சுமி நாராயணன் என்ற அழகிய குழந்தையை பெற்றெடுத்தாா், சரஸ்வதிபாய். இல்லற வாழ்க்கையில் இருந்தாலும், ஆன்மிக வாழ்க்கையிலும் தன்னை பலமாக ஈடுபடுத்திக்கொண்டு செயல்பட்டார், வெங்கடநாதன். காலம் செல்லச் செல்ல ஸ்ரீ சுதீந்திர தீர்த்தருக்கு உடல் நலிவுற்றது. தினமும் செய்து வந்த மூலராமர் பூஜை, எந்நாளும் தடைபடக்கூடாது என்று மனக்கவலை அடைந்தார். 'தனக்கு பிறகு இந்த மடத்தை யார் கவனிக்க போகிறார்கள்' என்ற துயரம் அவரை தூங்க விடாமல் செய்தது. ஒரு கட்டத்தில் தன் மனதில் தோன்றிய விஷயத்தைக் கேட்பதற்காக, தன் மனதிற்கு நெருக்கமான சீடனான வெங்கடநாதனை அழைத்தார். அவரிடம், "நீதான் எனக்குப் பிறகு இந்த மடத்தை நிர்வகிக்க வேண்டும். எனவே, சன்னியாசம் பெற்றுக்கொள்" என்று கேட்டார். ஆனால் வெங்கடநாதனோ, "சுவாமி.. இல்லற வாழ்க்கையில் இருக்கும் நான் சன்னியாசம் ஏற்பது எப்படி?" என்று கேட்டு மறுத்துவிட்டார். இதனால் வெங்கடநாதனின் குரு மேலும் கவலை கொண்டார்.
ஒருநாள் மத்வ நவமி அன்று ஸ்ரீ சுதீந்திர தீர்த்தர் கனவில் மூலராமர், வேதவியாச பகவான் மற்றும் ஸ்ரீ மத்வாச்சாரியார் ஆகியோர் தோன்றி, "வெங்கடநாதனே ஸ்ரீ மடத்தை கவனிக்கும் தகுதி பெற்றவர். அவருக்கு தீட்சை கொடுத்து 'ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தர்' என்ற நாமகரணத்தை சூட்டு" என்று கட்டளையிட்டனர்.
இதற்கிடையில் தனது குருவின் வேண்டுகோளை நிராகரித்து விட்ட வேதனையில் ஆழ்ந்திருந்தார், வெங்கடநாதன். அப்போது அவரது கனவில் தோன்றிய சரஸ்வதி தேவி, "வெங்கடநாதா, நீ உலகை ரட்சிக்க பிறந்தவன். நீ சன்னியாசம் ஏற்பதற்காகவே அவதரித்தவன். ஸ்ரீ மூலராமர் பூஜைகளை நீயே செய்ய வேண்டும். நான் உன் நாவில் எப்போதும் இருப்பேன்" என கூறி மறைந்தார்.
சரஸ்வதி தேவியின் கட்டளையை ஏற்ற வெங்கடநாதன், தன் குருவிடம் சென்று தன்னுடைய விருப்பத்தைக் கூறி சன்னியாசம் ஏற்பதாக சொன்னார். இதனால் மனம் மகிழ்ந்த ஸ்ரீ சுதீந்திர தீர்த்தர், வெங்கடநாதனுக்கு 'ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தர்' என நாமகரணம் சூட்டி, தஞ்சையில் தீட்சை அளித்தார். அதன்பிறகு பக்தர்களுக்கு பல மகிமைகளை செய்து வந்த ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள், மாஞ்சால கிராமத்தில் (மந்த்ராலயம்) ஜீவசமாதி அடைந்தார். அது நிகழ்ந்தது 1671-ம் ஆண்டு ஒரு வியாழக்கிழமையாகும்.
கேட்பதை கேட்டபடி வழங்கும் மத்வ குருவான ராகவேந்திர சுவாமிகள் சன்னியாசம் ஏற்று, வருகிற 22-ந் தேதி (புதன்கிழமை)யுடன் 402 ஆண்டுகள் ஆகின்றது. மேலும் அவர் அவதார நாளும் வருகிற 26-ந் தேதி வருகிறது. இது ராகவேந்திர சுவாமிகளின் 428-வது ஜெயந்தி நாள் ஆகும். இதனை 'வர்தந்தி விழா' என்ற பெயரில் கொண்டாடுவார்கள்.
மேற்கண்ட இரு தினங்களிலும் பக்தர்கள் அனைவரும் அருகில் உள்ள ராகவேந்திரர் ஆலயத்திற்குச் சென்று, ராகவேந்திரரை வழிபாடு செய்வோம். வேண்டிய அனைத்தையும் பெற்றிடுவோம்.