தூய வாழ்வும், தீய வாழ்வும்
|இந்த உலகில் தீய வழியில் வாழ்வது மிக மிக எளிது. ஆனால், நாளை மறுமையில் அவ்வாறு வாழ முடியாது. இங்கு தீய வழியில் சுகம் அனுபவித்தால் அங்கு நிரந்தரமாக துன்பங்களில் மனிதன் சிக்கித் தவிப்பான்.
உலக வாழ்க்கையைக் குறித்த இஸ்லாத்தின் பார்வை ஏனைய சமயங்களில் இருந்து முற்றிலும் மாறுபடுகிறது. இஸ்லாத்தைப் பொறுத்தவரை இந்த வாழ்வு மறுமைக்கான விளைநிலம். கிடைத்திருக்கும் இந்த வாழ்வை கவனமாக வாழ்ந்து, மறுமை வெற்றியை இலக்காகக் கொள்வதா? அல்லது வீணடிப்பதா? என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.
திருக்குர்ஆன் (57:20) கூறுகிறது: "நன்கு அறிந்து கொள்ளுங்கள்; இந்த உலக வாழ்க்கை விளையாட்டும், கேளிக்கையும், வெளிப்பகட்டும் மற்றும் உங்கள் இடையே ஒருவருக்கொருவர் பெருமை அடித்து கொள்ளுதல், செல்வங்கள், குழந்தைகள் ஆகியவற்றில் ஒருவரை ஒருவர் மிஞ்சி விட முற்படுதலே அன்றி வேறில்லை. அதற்கான உவமை, மழை பொழிந்திடும்போது அதன் மூலம் விளைகின்ற தாவரங்களை பார்த்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைவது போன்றதாகும். பின்னர் அதே பயிர் காய்ந்து விடுகின்றது, அது மஞ்சளித்துப் போவதையும், பின்னர் பதராகி விடுவதையும் நீர் பார்க்கலாம். இதற்கு மாறாக மறுமை எத்தகைய இடமெனில் அங்கு கடும் தண்டனை இருக்கிறது. அல்லாஹ்வின் மன்னிப்பும் திருப்தியும் இருக்கின்றன. ஆனால் உலக வாழ்க்கை ஓர் ஏமாற்றுச் சாதனமே தவிர வேறு எதுவும் இல்லை".
ஆனால், இறைவன் படைத்த நோக்கத்தை மறந்து உலக மோகங்களில் மனிதன் மயங்கி விடுகின்றான். உலகம் என்பது பாலைவனத்தில் தென்படும் கானல் நீர் போன்றது. அது போலத்தான் இவ்வுலக வாழ்வும். இங்கு வாழ இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று தூய வழி. இன்னொன்று தீய வழி.
தூய வழியில் வாழ்வது சவாலானது. இறைவன் கூறிய தூய முறையில் இவ்வுலகில் வாழ்ந்தோம் என்றால், மழைக்காலத்தில் எவ்வாறு வீடுகளைச் சுற்றி தண்ணீர் இருக்குமோ அதுபோல மனிதனைச் சுற்றி துன்பங்கள் இருக்கும். இதை பொறுத்துக்கொண்டு இவ்வுலகில் வாழ்ந்தோம் என்றால் இங்கும் வெற்றி, நாளை மறுமையிலும் வெற்றி.
நபி (ஸல்) அவர்கள் தூய வழியைப் போதித்தபொழுது அவருடைய உறவினர்களே நோவினை செய்தனர். ஏளனம் செய்தனர். கல்லால் அடித்தனர். தொடர் துன்பங்கள் அலையென வந்தபோதும்கூட நபி (ஸல்) அவர்கள் அந்தத் தூய வழிமுறையைப் போதித்துக் கொண்டே இருந்தார்கள். அதில் உறுதியாக இருந்தார்கள். வெற்றியும் பெற்றார்கள்.
எனவே துன்பங்களையும், கஷ்டங்களையும், துயரங்களையும் அனுசரித்து வாழ்ந்தால் உலகில் ஒருநாள் வெற்றி நிச்சயம் என்பதுடன், நாளை மறுமையிலும் நிரந்தர வெற்றி கிட்டும்.
இந்த உலகில் தீய வழியில் வாழ்வது மிக மிக எளிது. ஆனால், நாளை மறுமையில் அவ்வாறு வாழ முடியாது. இங்கு தீய வழியில் சுகம் அனுபவித்தால் அங்கு நிரந்தரமாக துன்பங்களில் மனிதன் சிக்கித் தவிப்பான்.
ஷைத்தான் முதலில் இவ்வுலகை அழகுபடுத்திக் காட்டுவான். மனிதர்கள் இதில் மயங்கி சுகபோக வாழ்க்கைக்கு அடிமையாகி விடுகிறார்கள். இதன் பிறகு ஷைத்தான் தன்னுடைய குணங்களான ஆணவம், கோபம், பொய், முகஸ்துதி, பேராசை போன்றவற்றை மனிதரிடத்தில் கொண்டு வரச்செய்வான். இதனால் மனிதன் தீயவனாக மாறிவிடுகிறான்.
இவ்வுலகில் ஷைத்தான் கூறுபவை எளிமையாக இருக்கும். ஆனால், நாளை மறுமையில் நிரந்தரக் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டும். மனித உள்ளம் தராசு போன்றது. தராசில் எங்கு எடை அதிகமாக இருக்குமோ அதன்பால் சாய்ந்துவிடும். அதுபோலத்தான் மனித உள்ளமும். எதன் மீது அதிகமாக ஆசை கொள்கிறோமோ அதன் பக்கம் சாய்ந்துவிடும்.
ஆகையால், நாம் இறைவனுக்குப் பயந்து, அவன் நம்மை கண்காணிக்கின்றான் என்ற உறுதியான நம்பிக்கையுடன் வாழ வேண்டும். ஷைத்தானிய செயல்களுக்கு அடிபணிந்துவிடக் கூடாது. தூய வழிமுறையைப் பின்பற்றுவதன் மூலமாக இவ்வுலகில் மனிதன் சில சோதனைகளை சந்தித்தாலும், மறுமையில் நிரந்தர வெற்றி பெற்றுவிடுகிறான். உண்மையில் மறுமை வெற்றிதானே மகத்தான வெற்றி.