< Back
ஆன்மிகம்
புஞ்சைபுளியம்பட்டி  சித்தி விநாயகர்- தர்மசாஸ்தா அய்யப்பன் கோவிலில் கும்பாபிஷேகம்
ஈரோடு
ஆன்மிகம்

புஞ்சைபுளியம்பட்டி சித்தி விநாயகர்- தர்மசாஸ்தா அய்யப்பன் கோவிலில் கும்பாபிஷேகம்

தினத்தந்தி
|
11 Dec 2022 10:03 PM GMT

புஞ்சைபுளியம்பட்டி சித்தி விநாயகர், தர்மசாஸ்தா அய்யப்பன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

புஞ்சைபுளியம்பட்டி

புஞ்சைபுளியம்பட்டி சித்தி விநாயகர், தர்மசாஸ்தா அய்யப்பன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

சித்தி விநாயகர்- தர்மசாஸ்தா கோவில்

புஞ்சைபுளியம்பட்டி நேரு நகரில் பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர், தர்ம சாஸ்தா அய்யப்பன் கோவில் 18 படிகளுடன் அமைந்து உள்ளது.

இந்த கோவிலின் கும்பாபிஷேகம் கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்றது. கும்பாபிஷேகம் முடிந்து 12 ஆண்டுகள் பூர்த்தியான நிலையில் இந்த ஆண்டு கும்பாபிஷே விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.

திருப்பணிகள்

இதையொட்டி கடந்த 3 மாதங்களாக கோவிலில் திருப்பணிகள் நடைபெற்றன. திருப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேக விழா கடந்த 8-ந் தேதி தொடங்கியது.

இதற்காக பக்தர்கள் பவானி ஆற்றுக்கு சென்று புனிதநீர் எடுத்தனர். பின்னர் பக்தர்களின் தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது. நேற்று முன்தினம் காலை வாஸ்து பூஜை நடந்தது. வாஸ்து பூஜையில் சரவணம்பட்டி சிரவை ஆதீனம் ராமானந்த குமரகுருபரர் சாமிகள் கலந்து கொண்டார். இதைத்தொடர்ந்து 3-ம் கால பூஜையும், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சியும், சாமி சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

கும்பாபிஷேகம்

நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் 4-ம் கால யாக பூஜை நடைபெற்றது. இதையடுத்து காலை 8 மணி அளவில் யாக சாலையில் இருந்து புனிதநீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சித்தி விநாயகர், தர்மசாஸ்தா அய்யப்பன் சாமிகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் சித்தி விநாயகர், தர்மசாஸ்தா அய்யப்பன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதைத்தொடர்ந்து மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு 18 படிகள் ஏறி அய்யப்பனை தரிசனம் செய்தனர்.

விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் செய்து இருந்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்