புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
|புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புதுக்கோட்டை,
மாசித்திருவிழா
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் அம்மன் புறப்பாடு நடைபெற்று வருகிறது. விழாவில் நேற்று கோவிலில் அம்மனுக்கு பொங்கலிட்டு பக்தர்கள் வழிபாடு நடத்தினர். மேலும் நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் 9-ம் நாளில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதையொட்டி கோவிலுக்கு பக்தர்கள் இன்று காலை முதலே வரத்தொடங்கினர். பக்தர்கள் பால் குடம் எடுத்து வந்தும், அலகு குத்தியும், காவடி எடுத்து வந்தும், பறவை காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் கரும்பில் தொட்டில் கட்டி சுமந்து வந்து வழிபட்டனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்தனர்.
தீமிதித்தனர்
தேரோட்டத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்ததால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சாரை, சாரையாக பக்தர்கள் கோவிலுக்கு வந்தப்படி இருந்தனர். இதனால் கலெக்டர் அலுலவலக சாலை முதல் திருவப்பூர் கோவில் வரையும், மேலும் கோவிலுக்கு வரக்கூடிய பாதைகளில் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது. மேள, தாளங்கள் முழங்கவும் பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். ஆதிவாசி போல வேடமணிந்தும், பல்வேறு வண்ணபொடிகளை உடலில் பூசியும், இளைஞா்கள் பெண் போல வேடமணிந்து வந்தும் வழிபட்டனர். கோவில் முன்பு இன்று மதியம் தீமிதி நடைபெற்றது. இதில் அக்னி குண்டத்தில் பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் அலகு குத்தியும், காவடி எடுத்து வந்தவர்களும் தீமித்தனர்.
தேரோட்டம்
விழாவில் தேரோட்டம் காட்டுமாரியம்மன் கோவில் அருகே இன்று மாலை கோலாகலமாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் முத்துமாரியம்மன் எழுந்தருளினார். தேரை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், கலெக்டர் மெர்சி ரம்யா, மாவட்ட வருவாய் அதிகாரி் செல்வி, முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக்தொண்டைமான் உள்ளிட்டோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். அதன்பின் பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேலும் பய, பக்தியுடன் அம்மனை தரிசனம் செய்தனர். தேர் கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக மீண்டும் கீழ விதியில் நிலையை வந்தடைந்தது. மாலை 4.30 மணிக்கு தொடங்கிய தேரோட்டம் மாலை 6.20 மணி அளவில் நிலைக்கு வந்தடைந்தது.
போலீஸ் பாதுகாப்பு
விழாவையொட்டி நகரில் பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டன. மேலும் நீர்மோர், குடிநீர், குளிர்பானங்கள் பக்தா்களுக்கு வழங்கப்பட்டன. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலைய துறை அதிகாரிகள் செய்திருந்தனர். விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. வருகிற 19-ந் தேதி காப்பு களைதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.