ஈரோடு
பிடாரியூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
|பிடாரியூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
சென்னிமலை
பிடாரியூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
மாரியம்மன் கோவில்
சென்னிமலை அருகே முகாசிப்பிடாரியூர் ஊராட்சிக்குட்பட்ட பிடாரியூரில் உள்ளது மாரியம்மன் கோவில். இந்த கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா கடந்த 16-ந் தேதி விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கியது.
17-ந் தேதி ஏராளமான பக்தர்கள் பல்வேறு நீர் நிலைகளில் இருந்து தீர்த்தம் எடுத்து ஊர்வலமாக புறப்பட்டு கோவிலுக்கு சென்றனர். அங்கு நவகிரக யாகம், தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 18-ந் தேதி காலையில் கோபுர கலசம் வைத்தல், புனித மண் எடுத்தல், புனித தீர்த்தம் எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், மாலையில் விநாயகர் வழிபாடு, முளைப்பாரி பூஜை, காப்பு கட்டுதல், கும்ப அலங்காரம், முதல் கால பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்று முன்தினம் காலையில் 2-ம் கால யாக பூஜை, மாலையில் 3-ம் கால யாக பூஜை, எந்திரம் வைத்தல், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன.
கும்பாபிஷேகம்
நேற்று காலை 4-ம் கால யாக பூஜை நடைபெற்றது. பின்னர் கலசங்கள் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அப்போது கோவில் கோபுரங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அப்போது பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.
இதையடுத்து விநாயகர், மாரியம்மனுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்து நின்று அம்மனை தரிசனம் செய்தனர்.
இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை மாரியம்மன் கோவில் விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.