தோஷங்கள் நீங்க பரிகாரம் செய்யணுமா..? தமிழகத்தில் உள்ள பரிகார சிவன் கோவில்கள் விவரம்
|பிறவியற்ற நிலையை அடைய திருவாரூர், திருவண்ணாமலை, சிதம்பரம் சிவன் கோவில்களுக்கு சென்று வழிபட வேண்டும்.
தோஷங்கள் நீங்கவும், வாழ்வில் ஏற்படும் துன்பங்களைப் போக்கவும் தமிழ்நாட்டில் பல்வேறு பரிகார சிவன் கோவில்கள் உள்ளன. அவை எந்தெந்த மாவட்டங்களில் அமைந்துள்ளன? அந்தக் கோவில்களுக்கு சென்று வழிபட்டால் நாம் எவ்வாறு துன்பங்களில் இருந்து விடுபடலாம்? என்பதைப் பார்ப்போம்.
நீண்ட காலமாக திருமணம் நடக்காமல் இருப்போர், திருமணம் கைகூடாமல் தொடர்ந்து தள்ளிப்போவோருக்கு - திருமணஞ்சேரி, திருவீழிமிழலை. இந்த இரு தலங்களுமே திருவாரூர் மாவட்டத்தில் அமைந்திருப்பது சிறப்பு. இக்கோவில்களில் பரிகார பூஜை செய்து வழிபடலாம்.
குழந்தைப்பேறு வேண்டுவோர் - திருவெண்காடு சென்று வழிபடலாம். இந்த தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
நாகதோஷம் உள்ளவர்கள் - திருநாகேஸ்வரம் கோவில் (தஞ்சாவூர் மாவட்டம்), சங்கரன்கோவில் (திருநெல்வேலி மாவட்டம்). மூட்டு வலி போன்ற தீராத நோய்கள் நீங்க - வைத்தீஸ்வரன் கோவில் (நாகை மாவட்டம்), சூரியனார் கோவிலை ஒட்டியுள்ள திருமங்கலக்குடி (தஞ்சாவூர்). மனநோய் தீர திருமுருகன் பூண்டி சென்று வழிபட வேண்டும். இக்கோவில் கோவை மாவட்டத்தில் உள்ளது.
தீமைகள் யாவும் தொலைய பவானி சங்கமேஸ்வரர் ஆலயம் சென்று வழிபட வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் இக்கோவில் உள்ளது.
பிறவியற்ற நிலையை அடைய திருவாரூர், திருவண்ணாமலை, சிதம்பரம் சிவன் கோவில்களுக்கு சென்று வழிபட வேண்டும். கடன் தொல்லை தீர்ந்து நிம்மதி பெற திருச்சேறை ரண ருண ஈஸ்வரரை (தஞ்சாவூர்) வழிபட வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் சுகப்பிரசவம் ஆவதற்கு திருக்கருகாவூர் கர்ப்பரட்சகாம்பிகை (தஞ்சை) மற்றும் குங்குமவல்லி சமேத தான்தோன்றீஸ்வரரை (திருச்சி) வணங்குதல் வேண்டும். பித்ரு தோஷம் எனப்படும் முன்னோர்களை வழிபடத் தவறியவர்களுக்கு ஏற்படும் தீவினைகளுக்கு ராமேஸ்வரத்தில் (ராமநாதபுரம்) உள்ள ராமநாத சுவாமியை வழிபடலாம்.
செவ்வாய் தோஷம் நீங்க வைத்தீஸ்வரன் கோவில் (நாகப்பட்டினம்), விஷக்கடி நிவாரணத்திற்கு சங்கரன் கோவில் (திருநெல்வேலி) சங்கரநயினாரை வழிபட வேண்டும். ராமநாதபுரம் அருகே உள்ள நயினார் கோவில் சென்றும் வழிபடலாம். வழக்குகளில் வெற்றியடைய அய்யாவாடி பிரத்யங்கிரா தேவி கோவில் (தஞ்சாவூர்) கடவுள் வழிபாடு.
சனி தோஷம் நீங்கி சுபிட்சம் பெற திருநள்ளாறு (காரைக்கால்), திருக்கொள்ளிக்காடு (தஞ்சாவூர்) சென்று வணங்கலாம்.ராகு கேது பரிகாரத்தை இணைந்து மேற்கொள்ள திருப்பாம்புரம் (திருவாரூர்) கோவில்.
தோஷங்களை போக்கும் இந்த கோவில்களில் உரிய காலங்களில் சென்று இறைவனை வழிபட்டு பரிகார பூஜைகள் செய்வது சிறப்பு. குறிப்பாக ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் பரிகார பூஜைகளை செய்வது கூடுதல் நலம் பயக்கும்.