வடபழனி முருகன் கோவிலில் பரணி கார்த்திகை தீபம்; விளக்குகள் ஏற்றி பக்தர்கள் வழிபாடு
|பரணி கார்த்திகையான நேற்று பக்தர்கள், உபயதாரர்கள் வாயிலாக, 150-க்கும் மேற்பட்ட விளக்குகள் வழங்கப்பட்டன.
சென்னை,
சென்னை வடபழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீப திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு, பரணி கார்த்திகையான நேற்று பக்தர்கள், உபயதாரர்கள் வாயிலாக, 150-க்கும் மேற்பட்ட விளக்குகள் வழங்கப்பட்டன. அவற்றில், 108 விளக்குகள் வள்ளி, தேவசேனா சுப்பிரமணியர் சன்னதியில், பக்தர்கள், உபயதாரர்கள் வாயிலாக ஏற்றப்பட்டன.
மூலவர் சன்னதியில், 36 குத்து விளக்குகள் ஏற்றப்பட்டன. நண்பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையின்போது மூலவருக்கு வெள்ளிகவசம் சாத்தப்பட்டது. மேலும், பிரகார பகுதியில், 8 ஆயிரத்து ஒன்று மின் விளக்குகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
கார்த்திகை மகா தீபத் திருநாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4:30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. காலை 6.30 மணிக்கு அபிஷேகம் முடிந்தவுடன் மூலவரான முருகப்பெருமானுக்கு ராஜ அலங்காரம் நடத்தப்படுகிறது. மாலை 5 மணிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு கார்த்திகை பூஜை நடத்தப்படுகிறது.
மேலும், 27 நட்சத்திரங்கள், 4 கோபுரங்கள், 8 சன்னதிகளில் கார்த்திகை தீப விளக்கு ஏற்றப்படுகிறது. இரவு, 8.30 மணிக்கு சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது. தரிசனம் முடித்து வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக பொரி உருண்டையும் வழங்கப்படுகிறது.