< Back
ஆன்மிகம்
பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழா: பக்தர்கள் தீ மிதித்து நேர்ச்சைக்கடன்
ஆன்மிகம்

பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழா: பக்தர்கள் தீ மிதித்து நேர்ச்சைக்கடன்

தினத்தந்தி
|
26 March 2024 6:06 PM IST

உள்துறை செயலாளர் அமுதா உள்ளிட்ட அதிகாரிகளும் தீ மதித்தனர்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பண்ணாரியில் அமைந்துள்ளது பண்ணாரி மாரியம்மன் கோவில் . இங்கு கொண்டாடப்படும் குண்டம் திருவிழா பிரசித்தி பெற்றதாகும்.

பழமையும், புகழும் பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா கடந்த 11-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதில் இருந்து தினமும் சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று குண்டம் திருவிழா ஏற்பாடுகள் தொடங்கின. பக்தர்கள் வழங்கிய எரி கரும்புகள் பிற்பகலில் எடுக்கப்பட்டு குண்டம் பற்றவைக்க அடுக்கப்பட்டன. தொடர்ந்து மாலையில் சிறப்பு பூஜை நடந்தது. எரி கரும்புக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டு குண்டம் பற்றவைக்கப்பட்டது. மாலையில் எரிய தொடங்கிய குண்டம் நள்ளிரவு வரை தீ கொளுந்து விட்டு எரிந்தது.

இன்று அதிகாலை 2.15 மணிக்கு கோவிலில் மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அம்மன் வீணை அலங்காரத்தில் முகமலர்ச்சியுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதிகாலை 3.50 மணிக்கு சப்பர ஊர்வலம் கோவில் குண்டத்தை வந்து சேர்ந்தது. பூஜைகள் முடிந்ததும், படைக்கலன், கலசம் சுமந்து வந்த பூஜாரிகளுடன் தலைமை பூஜாரியும் குண்டத்தில் இறங்கி தீ மிதித்து தொடங்கி வைத்தனர். தொடர்து பக்தர்கள் குண்டம் இறங்கி தங்கள் நேர்ச்சைக்கடனை செலுத்தினார்கள்.

தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளர் அமுதா, சிறப்பு இலக்குப்படை போலீஸ் ஐ.ஜி. முருகன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், பவானிசாகர் தொகுதி எம்.எல்.ஏ. பண்ணாரி ஆகியோரும் தீ மிதித்தனர்.

அதிகாலை 3.55 மணிக்கு தொடங்கிய தீ மிதிக்கும் நிகழ்வு 12 மணி நேரத்தையும் கடந்து மாலை 4 மணிக்கு பிறகும் பக்தர்கள் கூட்டம் நெருக்கியடித்து வந்து கொண்டே இருந்தது. இதனால் மாலை வரை பக்தர்கள் குண்டத்தில் இறங்கினார்கள். இறுதியாக கால்நடைகளுடன் விவசாயிகள் குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர்.

குண்டம் விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வந்து கோவில் வளாகத்தில் குவிந்தனர். கர்நாடக மாநில பகுதிகளில் இருந்து 5 நாட்களுக்கு முன்பே வந்த பக்தர்கள் தடுப்பு வேலிகளுக்குள் அமர்ந்து காத்திருந்து குண்டம் இறங்கி தங்கள் நேர்ச்சை கடனை நிறைவேற்றினார்கள். மேலும் வழக்கமாக இரவில் இருந்தே பக்தர்கள் குவிந்து, பிற்பகலில் அனைவரும் கலைந்து சென்று விடுவார்கள். ஆனால் இன்று பிற்பகலிலும் கட்டுக்கடங்காத வகையில் பக்தர்கள் குவிந்தனர்.

நாளை(புதன்கிழமை) மலர் தேரில் சாமி ஊர்வலம் நடக்கிறது. நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏப்ரல் 1-ந் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.

மேலும் செய்திகள்