< Back
ஆன்மிகம்
குண்டம் திருவிழா.. பண்ணாரி மாரியம்மன் கோவிலில் கம்பம் சாட்டும் நிகழ்ச்சி
ஆன்மிகம்

குண்டம் திருவிழா.. பண்ணாரி மாரியம்மன் கோவிலில் கம்பம் சாட்டும் நிகழ்ச்சி

தினத்தந்தி
|
20 March 2024 2:09 PM IST

மார்ச் 26-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

சத்தியமங்கலம்,

சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகுசிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா கடந்த 11ஆம் தேதி திங்கட்கிழமை பூச்சாற்றுடன் தொடங்கியது.

12-ம் தேதி இரவு பண்ணாரி மாரியம்மன், சருகு மாரியம்மன் சப்பர ஊர்வலம் புறப்பட்டது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த சப்பரம் சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த சுமார் நூறு கிராமங்களின் வழியாக சென்றுவிட்டு நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 12 மணிக்கு பண்ணாரி அம்மன் கோவிலை அடைந்தது. பக்தர்களும் கோயில் நிர்வாகிகளும் ஆரத்தி எடுத்து அம்மன் சப்பரத்தை வரவேற்றனர். பின்னர் அம்மனுக்கு கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

இதனை தொடர்ந்து அம்மன் கோவிலை சுற்றியுள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி அம்மனை தரிசித்தனர். இதனைத் தொடர்ந்து கோவிலின் ஒரு பகுதியில் குவித்து வைக்கப்பட்டிருந்த வேம்பு மற்றும் ஊஞ்சல் மரக்குச்சிகளை பூசாரி மற்றும் பக்தர்கள் ஆளுக்கு கொஞ்சமாக எடுத்துக் கொண்டு கோவிலை வலம் வந்தனர். பின்னர், கோவிலின் முன்பாக குண்டத்தின் அருகே ஐந்தடி ஆழத்திற்கு 15 அடி விட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குழியில் அந்த குச்சிகளை போட்டனர்.

இதையடுத்து இன்று அதிகாலை 4.30 மணிக்கு கம்பம் சாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது குழிக்கம்பத்தில், பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். குழியில் போடப்பட்ட வேம்பு மற்றும் ஊஞ்சல் மர குச்சிகள் மீது கற்பூரம் ஏற்றி நெருப்பு பற்ற வைக்கப்பட்டதால், ஆள் உயரத்திற்கு ஜுவாலையுடன் எரிந்தது. அப்போது பக்தர்கள் பக்தி முழக்கம் எழுப்பி கம்பத்தை வணங்கினர். அதன் பின்னர் பீனாட்சி இசைக்கு ஏற்ப மலைவாழ் மக்கள் மற்றும் பக்தர்கள் நடனமாடி கம்பத்தை சுற்றி வந்தனர்.

இந்த கம்ப ஆட்டம் வரும் 25-ம் தேதி வரை நடைபெறும். 26-ம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி (பக்தர்கள் தீ மிதிக்கும் நிகழ்ச்சி) நடைபெறும். லட்சக்கணக்கானோர் அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதிப்பார்கள்.

27-ம் தேதி பண்ணாரி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கிராமப் பகுதியில் உள்ள பெண்கள் பகல் 12 மணிக்கு மாவிளக்கு எடுத்து வருவார்கள். இரவு 10 மணிக்கு சிம்ம வாகனத்தில் அம்மன் புஷ்பரதம் திருவீதி உலா நடைபெறும். 28-ம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும். 29-ம் தேதி தங்க ரதம் புறப்பாடும் நடைபெறும்.

ஏப்ரல் 1-ம்தேதி திங்கட்கிழமை மறுபூஜை விழா நடைபெறும். இத்துடன் விழா நிறைவு பெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் அலுவலர்கள் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்