தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் களைகட்டிய பங்குனி உத்திர திருவிழா
|தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா களைகட்டியது.
சென்னை,
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அந்த வகையில் சென்னை திருவல்லிக்கேணி முருகன் கோவிலில் நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழாவில் பங்கேற்ற ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து, அலகு குத்தி, காவடி எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் உள்ள வானமாமலை பெருமாள் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தங்கத் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு கோவிந்தா, கோபாலா கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் உள்ள முப்பெரும் தேவியர் ஆலயத்தில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு அபிஷேக விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இதே போல் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா களைகட்டியது. ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்துவந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி முருகனை வழிபட்டனர்.