< Back
ஆன்மிகம்
திருச்செந்தூர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
ஆன்மிகம்

திருச்செந்தூர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

தினத்தந்தி
|
25 March 2024 12:27 AM IST

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நேற்று ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர்.

திருச்செந்தூர்,

அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. 6 மணிக்கு கோவிலில் இருந்து வள்ளி அம்பாள் தபசுக்காக, ஆனந்தவல்லி சமேத சிவகொழுந்தீஸ்வரர் கோவிலுக்கு எழுந்தருளினார்.

மாலையில் கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி சன்னதி தெரு வழியாக ஆனந்தவல்லி சமேத சிவகொழுந்தீஸ்வரர் கோவிலுக்கு சென்று அம்பாளுக்கு காட்சி கொடுத்தார். தொடர்ந்து சுவாமியும், அம்பாளும் கீழ ரதவீதி, பந்தல் மண்டபம் முகப்பிற்கு சென்றனர்.

அங்கு சுவாமிக்கும், வள்ளி அம்பாளுக்கும் தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு, வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி கொடுத்து, பின்னர் கோவிலுக்கு வந்து சேர்ந்தனர். இரவு கோவிலில் 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், வள்ளி அம்பாளுக்கும் வைதீக முறைப்படி திருக்கல்யாணம் நடந்தது.

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நேற்று ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர். கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். பாதயாத்திரை பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடம், காவடி எடுத்தும் தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.

மேலும் செய்திகள்