சபரிமலையில் பங்குனி உத்திர திருவிழா: பம்பை ஆற்றில் அய்யப்பனுக்கு ஆராட்டு.. குவிந்த பக்தர்கள்
|விழாவின் நிறைவாக நேற்று பம்பை ஆற்றில் அய்யப்பனுக்கு ஆராட்டு நடைபெற்றது.
திருவனந்தபுரம்,
பங்குனி மாதபூஜை மற்றும் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழாவையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த 13-ந் தேதி திறக்கப்பட்டது. மறுநாள் முதல் வழக்கமான பூஜை நடந்த நிலையில் 16-ந் தேதி பங்குனி உத்திர ஆராட்டு திருவிழாவுக்கான கொடியேற்றப்பட்டது.
அன்றைய தினம் காலை 8.45 மணிக்கு நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பிறகு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு கொடியை ஏற்றி வைத்தார். அதன்பிறகு தினமும் வழக்கமான பூஜைகளுடன் உத்சவ பலி, படிபூஜை நடந்தது. 9-ம் திருவிழாவான நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு சரம்குத்தியில் பள்ளி வேட்டை நடைபெற்றது.
இதை தொடர்ந்து நேற்று விழாவின் நிறைவாக பம்பை ஆற்றில் அய்யப்பனுக்கு ஆராட்டு நடைபெற்றது. இதனையொட்டி காலை 8 மணிக்கு அய்யப்ப விக்ரகம் தாங்கிய அலங்கரிக்கப்பட்ட யானை ஊர்வலம் மேள, தாளம் முழங்க சன்னிதானத்தில் இருந்து புறப்பட்டது.
இந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலம் காலை 11 மணிக்கு பம்பை வந்து சேர்ந்தது. பிறகு ஆற்றில் அலங்கரிக்கப்பட்ட ஆராட்டு கடவில் அய்யப்பனுக்கு ஆராட்டு நடைபெற்றது.
ஆராட்டு சடங்குகளை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு நிறைவேற்றினார். களபம், மஞ்சள் பூசி ஆராட்டு கடவில் 3 முறை மூழ்கி அய்யப்பனுக்கு ஆராட்டு சடங்கு நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து புத்தாடை அணிவிக்கப்பட்ட அய்யப்பனை பக்தர்களின் தரிசனத்திற்காக பம்பை கணபதி கோவிலில் வைத்தனர்.
மாலையில் அய்யப்ப விக்ரகம் ஊர்வலமாக மீண்டும் சன்னிதானம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு சிறப்பு தீபாராதனைக்கு பிறகு திருவிழா கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவுக்கு வந்தது. பின்னர் வழக்கம்போல் இரவு 10.30 மணிக்கு அரிவராசனம் பாடி கோவில் நடை அடைக்கப்பட்டது.
விஷு பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை அடுத்த மாதம் 10-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும்.