திருப்பரங்குன்றத்தில் பங்குனி திருவிழா தொடங்கியது
|திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொடியேற்றத்துடன் பங்குனி திருவிழா தொடங்கியது. வருகின்ற 28-ந்தேதி திருக்கல்யாணமும், 29-ந் தேதி தேரோட்டமும் நடக்கிறது.
திருப்பரங்குன்றம்,
முதற்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் பங்குனி திருவிழா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.இந்த திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் 15 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம்.அதேபோல இந்த ஆண்டிற்கான பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகின்ற 30-ந் தேதி வரை திருவிழா நடக்கிறது.
திருவிழாவின் முதல் நாளான நேற்று காலை 9.15 மணியளவில் மேள தாளங்கள் முழங்க முருகப்பெருமான், தெய்வானை சப்பரத்தில் கொடி கம்பம் முன்பு கொண்டு வரப்பட்டது. தங்க முலாம் பூசப்பட்ட கொடி கம்பத்தில் கொடியேற்றப்பட்டது. இதனையடுத்து கொடி கம்பத்துக்கு பால், பன்னீர், இளநீர் மற்றும் புனித நீர் கொண்டு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தது.
பிறகு கொடிமரத்தின் உயரத்திற்கு மாலை சூடப்பட்டு மகா தீப, தூப, ஆராதனை நடந்தது,. திருவிழாவையொட்டி வருகின்ற 30-ந் தேதி வரை தினமும் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் பல்வேறு வித, விதமான வாகனங்களிலும் சுவாமி அம்பாளுடன் எழுந்தருளி திருவீதி உலா வருகிறார்.
திருவிழாவிவின் முக்கிய நிகழ்ச்சிகளாக வருகின்ற 21-ந் தேதி கைப்பாரம். 24-ந் தேதி பங்குனி உத்திரம், 26-ந் தேதி சூரசம்ஹாரலீலை, 27-ந் தேதி பட்டாபிஷேகம், 28-ந்தேதி திருக்கல்யாணம், 29-ந் தேதி தேரோட்டம் 30-ந்தேதி தீர்த்த உற்சவம் நடக்கிறது.
திருவிழாவையொட்டி 16 கால் மண்டபம் வளாகத்தில் தினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், பக்தி சொற்பொழிவுகள், இன்னிசை நிகழ்ச்சிகள் நடக்கிறது.