பிதுர் தோஷம் நீக்கும் பஞ்ச பைரவர்
|பஞ்ச பைரவ வழிபாடு என்பது, ‘பிதுர்தோஷ நிவர்த்தி’க்கு சிறந்ததொரு வழிபாடு ஆகும்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, ஆவூர் திருத்தலம். இங்கு பசுபதீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இங்கு சிவபெருமான், 'பசுபதீஸ்வரர்' என்ற திருநாமத்துடனும், அம்பாள் 'பங்கஜவல்லி' என்ற திருநாமத்துடனும் அருள்பாலித்து வருகிறார்கள். வசிஷ்ட முனிவரால் சாபம் பெற்ற காமதேனு என்ற வானுலக பசு, பூமிக்கு வந்து இறைவனை பூஜித்து சாப விமோசனம் பெற்ற இடம் இந்த திருத்தலமாகும். எனவே தான் இத்தலம் 'ஆவூர்' என்றானது. ('ஆ' என்பது 'பசு'வை குறிக்கும்).
இந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பம்சம், 'பஞ்ச பைரவ மூர்த்திகள்.' இந்த ஐந்து பைரவர்களும் ஒரே பீடத்தில் வீற்றிருக்கிறார்கள். இவர்களை தேய்பிறை அஷ்டமி தினத்தில் வழிபாடு செய்தால், அனைத்து துன்பங்களும் நீங்கும். பஞ்ச பைரவ வழிபாடு என்பது, 'பிதுர்தோஷ நிவர்த்தி'க்கு சிறந்ததொரு வழிபாடு ஆகும். பிதுர் சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளவர்கள், இந்த பைரவரை வழிபாடு செய்து வந்தால் உடனடியாக பலன் கிடைக்கும்.
ஒரு சிலர் நிறைய சம்பாதிப்பார்கள். இருந்தாலும் கடன் தீராது. இன்னும் சிலருக்கு நல்ல திறமைகள் இருக்கும். ஆனால் சரியான வேலையோ, வாய்ப்புகளோ அமையாமல் வருமானம் இன்றி இருப்பார்கள். பலபேர் அனைத்து செல்வங்களையும் பெற்றிருப்பர், ஆனால் வாழ்வில் அமைதி இருக்காது. அப்படிப்பட்டவர்களின் அந்த நிலைக்கு, பிதுர் தோஷம்தான் காரணம். அவர்கள் அனைவரும், இத்தல பஞ்ச பைரவர்களை வழிபட்டு, பிதுர் தோஷத்தை போக்கிக்கொள்ளலாம்.