< Back
ஆன்மிகம்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பானகம் படைத்து சிறப்பு பூஜை
ஆன்மிகம்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பானகம் படைத்து சிறப்பு பூஜை

தினத்தந்தி
|
14 March 2024 4:24 PM IST

கோடை காலத்தில் வெப்பம் நீங்கி குளிர்ச்சியுடன் இருப்பதற்காக பகவதி அம்மன் கோவிலில் 'பானகம்' படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

கன்னியாகுமரி,

பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.

தற்போது பங்குனி, சித்திரை மாதங்கள் கோடை காலம் ஆகும். இந்த மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் ஒவ்வொரு ஆண்டும் இந்த மாதங்களில் அக்னி நட்சத்திரம் ஆரம்பித்தவுடன் வெயிலின் உக்கிரம் அதி கரித்து அனல் காற்று வீசும். கோடை வெயில் காலங்களில் பொதுமக்கள் இளநீர், நுங்கு, பானகம், மோர், கரும்பு ஜூஸ் போன்ற குளிர் பானங்களை அருந்தி சூட்டை தணித்துக் கொள்வார்கள்.

கோடை காலத்தில் வெப்பம் நீங்கி குளிர்ச்சியுடன் இருப்பதற்காக பகவதி அம்மன் கோவிலில் 'பானகம்' என்ற குளிர்பானம் மாலை நேரத்தில் நிவேத்தியமாக படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

பங்குனி, சித்திரை ஆகிய 2 மாதங்களும் தினமும் மாலை 4 மணிக்கு கோவில் நடை திறந்தவுடன் 'பானகம்' நிவேத்தியமாக படைத்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது. பானகம் என்பது எலுமிச்சை பழம், சர்க்கரை, ஏலம், சுக்கு, புளி ஆகியவற்றை தண்ணீரில் கரைத்து தயார் செய்வது ஆகும். இந்த பானகத்தை கோடை காலத்தில் அருந்தினால் வெப்பம் நீங்கி குளிர்ச்சியாக இருக்கும்.

இந்த ஆண்டு பங்குனி மாத பிறப்பான இன்று (வியாழக்கிழமை) முதல் 60 நாட்கள் தினமும் மாலை 4 மணிக்கு பகவதி அம்மனுக்கு பானகம் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு சாயராட்சை தீபாராதனை முடிந்ததும். அம்மனுக்கு படைக்கப்பட்ட பானகம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

இதனை அருந்தினால் வெப்பம் சம்மந்தமான நோய்கள் வராது என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும். இதனால் இந்த பானகம் பிரசாதத்தை வாங்கி குடிக்க கோவிலில் தினமும் மாலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்