பல்லவ மன்னர் கட்டிய மலை சிவாலயம்
|மாமல்லபுரம் கடற்கரைக் கோவில், காஞ்சி கயிலாசநாதர் கோவில் போன்றவற்றை கட்டமைத்த, ராஜசிம்மன் என்ற இரண்டாம் நரசிம்ம பல்லவனால், பனைமலை தாளகிரீஸ்வரர் திருக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரத்தில் இருந்து செஞ்சி செல்லும் சாலையில், செஞ்சியில் இருந்து 23 கிலோமீட்டரில் அமைந்துள்ளது, பனமலை கிராமம். இங்கு பனை மரத்தை தல விருட்சமாக கொண்ட சிவாலயம் ஒன்று மலை மீது அமைந்திருக்கிறது. 'தாள்' என்ற சொல் பனை மரத்தைக் குறிக்கும் என்பதால், இத்தல இறைவனின் பெயர் தாளகிரீஸ்வரர் என்று அமைந்துள்ளது. மாமல்லபுரம் கடற்கரைக் கோவில், காஞ்சி கயிலாசநாதர் கோவில் போன்றவற்றை கட்டமைத்த, ராஜசிம்மன் என்ற இரண்டாம் நரசிம்ம பல்லவனால், பனைமலை தாளகிரீஸ்வரர் திருக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது.
1400 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தை சென்றடைவதற்கு முன்பாக, அடிவாரத்தில் ஒரு விநாயகர் கோவில் அமைந்திருக்கிறது. பாறையை முற்றிலுமாக குடைந்து உருவாக்கப்பட்ட ஆலயம் இது. சன்னிதியின் முன்பகுதியில் கற்களால் அமைக்கப்பட்ட சிற்ப வேலைபாடுகளுடன் கூடிய கற்தூண்களும் உள்ளன. இந்த சன்னிதியில் பெரிய விநாயகர் உரு வம் உள்ளது. கோவில் பாறை சுவற்றில் மூஞ்சுறு வடிவமும் செதுக்கப்பட்டுள்ளது.
இங்கிருந்து தொடங்கி மேல் நோக்கிச் சென்றால் தாளகிரீஸ்வரர் ஆலயத்தை அடையலாம். செங்குத்தான மலையில் ஏறுவதற்குப் பாறைகளையே படிகளாகச் செதுக்கி இருக்கிறார்கள். செல்லும் வழியில் ஒரு சுரங்கப்பாதையின் வாயில் பகுதி தெரிகின்றது. இச்சுரங்கப்பாதை மேலே இருக்கும் கோவில்வரை செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சுரங்கப்பாதை தற்சமயம் புதர்கள் மண்டிக்கிடப்பதால் உள்ளே நுழைந்து பார்க்க முடியாத நிலையில் இருக்கின்றது.
படிகளைக் கடந்து செல்லும் போது பாறைகளுக்கிடையே குடைந்து சுனைகள் இருப்பதைக் காண முடிகின்றது. பெரிய குளங்களும் பாறைகளுக்கு இடையில் இருக்கின்றன. நீர் தேங்கி இருக்கும் குளங்களில் அல்லியும் தாமரைச்செடிகளும் நிறைந்திருக்கின்றன. இந்தக் கோவிலில் உள்ள விமானம், கோபுரம், மகரதோரணம், வாயிற்காப்போர் மற்றும் ஏனைய இடங்களில், பல்லவர்களுக்குப் பின்னர் இப்பகுதியில் ஆட்சி செய்த மன்னர்களின் சீரமைப்பு பணியும் இடம்பெற்றிருக்கிறது. இவற்றையெல்லாம் தாண்டி, கோவிலைச் சுற்றி அனைத்து பகுதிகளிலும் ராஜசிம்ம பல்லவனுடைய காலத்து நிகழ்வுகளைக் கூறும் நீண்ட 'கிரந்த கல்வெட்டுகளை'க் காணலாம்.
பல்லவ மன்னர்கள் இசை, நடனம், நாட்டியம், சிற்பக்கலை, ஓவியம் எனக் கலைகளை வளர்த்தவர்கள். பாறைக் கோவில்கள், குடைவரைக் கோவில்கள் ஆகியவற்றோடு கவின் மிகு ஓவியங்களைதீட்டும் பணியை செய்தவர்கள் என்பதற்கு, இந்த தாளகிரீஸ்வரர் ஆலயப் பாறைகளில் காணப்படும் ஓவியங்களும் ஒரு சான்றாக விளங்குகின்றன.
இந்த ஆலயத்தில் மூலவராக தாளகிரீஸ்வரர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அம்பாளின் திருநாமம், அஷ்டதாளாம்பிகை என்பதாகும். ஆலயத்தின் தல விருட்சமாக பனை மரமும், தீர்த்தமாக கங்கை தீர்த்தமும் உள்ளது. இந்த ஆலயத்தில் சித்திரை மாதம் 1-ந் தேதி நடைபெறும் படி விழா மிகவும் சிறப்புக்குரியதாகும்.
மலை மீது வீற்றிருக்கும் ஆலயங்களில் அருளும் தெய்வங்களுக்கும், அந்த ஆலயத்திற்கும் எப்போதும் விசேஷ சக்தி இருக்கும். அந்த வகையில் இத்தல இறைவனை வழிபடும் பக்தர்கள் வாழ்வில் சிறப்பான இடத்தைப் பெற்று நலமோடு வாழ்வார்கள்.