கிருஷ்ணருக்கு பால் பாயசம்
|* கேரளாவில், ஆலப்புழை அருகேயுள்ள அம்பலம்புழை கிருஷ்ணன் கோவிலில், கிழக்கு நோக்கி அருள்கிறார் கிருஷ்ணன். இவருக்கு பால் பாயசம், நைவேத்தியம் செய்தால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை. இங்கு ஒரு லிட்டர் பாலில் இரண்டரை கிலோ சீனி கலந்து பாலை சுண்டக்காய்ச்சி பால் பாயசம் தயாரிக்கின்றனர்.
* குரு பகவானும், வாயு பகவானும் சேர்ந்து பிரதிஷ்டை செய்த தலமான குருவாயூரில் உள்ள உன்னிக் கிருஷ்ணன் விக்கிரகம், பாதாள அஞ்சனம் என்னும் அபூர்வ மூலிகைப் பொருளால் ஆனது.
* வைணவத் திருத்தலங்கள் பலவற்றில், பெருமாள் சயனக் கோலத்தில் ஆதிசேஷனை தலையணையாகக் கொண்டு படுத்திருக்கும் காட்சியைப் பார்த்திருப்போம். அதே போல் துவாரகையில் உள்ள கிருஷ்ணன் கோவிலில், கிருஷ்ணர் சயனக் கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
* கிருஷ்ண ஜெயந்தி அன்று பக்தர்கள் விரதம் இருந்து கண்ணனை வழிபடுவார்கள். அவ்வாறு செய்தால் தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள் விலகும் என்பது ஐதீகம்.
* திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வேணுகோபாலன் ஆலயத்தில் உள்ள வேணுகோபாலன் சிலை, நேபாளம் கண்டகி நதியில் கிடைக்கும் சாளக்ராமக் கல்லினால் ஆனது. கிருஷ்ண ஜெயந்தியன்று இங்கு பெருமாளுக்கு கண் திறப்பும், சங்கில் பால் புகட்டும் வைபவங்களும் நடக்கின்றன.
* திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கத்தில் பத்மாவதி, ஆண்டாளுடன் கண்ணன் தரிசனம் தருகிறார். ஏழை பக்தனுக்கு புதையலைக் காட்டி அருளிய பெருமாள் இவா்.
* கடலூா் புதுப்பாளையத்தில் கண்ணன், ராஜகோபாலனாக செங்கமலவள்ளி நாச்சியாருடன் அருளும் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலயத்தில் திருப்பதி கோவிலுக்கு செலுத்த வேண்டிய காணிக்கைகளை செலுத்தலாம் என்று கூறுகிறார்கள்.