சபரிமலை மண்டல, மகர பூஜைக்கு ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்
|சபரிமலை அய்யப்பன் கோயிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாக்களில் நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருவார்கள். கொரோனா பிரச்சினை காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சபரிமலை செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதனால் கோவிலுக்கு பக்தர்கள் தாராளமாக செல்லலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை டிசம்பர் மாதம் 27-ந் தேதி நடக்கிறது. இதற்காக கோவில் நடை நவம்பர் மாதம் 16-ந்தேதி திறக்கப்படுகிறது. 17-ந்தேதி முதல் பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இதுபோல மகர விளக்கு பூஜை ஜனவரி மாதம் 14-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த இரு விழாக்களிலும் பக்தர்கள் பங்கேற்பதற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்கியது. இதற்கு முன்பு கேரள போலீசாரின் இணைய தளம் மூலம் இந்த முன்பதிவு நடந்து வந்தது.
தற்போது இந்த முன்பதிவை சபரிமலை கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு நடத்துகிறது. இன்று முதல் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு விழாக்களுக்கும், ஐப்பசி மாத பூஜைக்கான விழாவிலும் பங்கேற்க பக்தர்கள் இன்று முதல் திருவிதாங்கூர் தேவசம் போர்டு https://sabarimalaonline.org என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.