பொங்கலையொட்டி, திருச்செந்தூர் முருகன் கோவிலில் அதிகாலையிலேயே குவிந்த பக்தர்கள்
|பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருச்செந்தூர்,
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். பண்டிகை காலங்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாகவே காணப்படும்.
இன்று (திங்கட்கிழமை) தைப்பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் கடவுளான முருகப்பெருமானை தரிசனம் செய்த பின்னர், தங்களது வீடுகளுக்கு சென்று தைப்பொங்கல் திருநாளை கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்த நிலையில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு கோவில் நடை இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது. அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.
காலையில் தை மாதப்பிறப்பு உத்திராயண புண்ணியகாலத்தை முன்னிட்டு சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி, பின்னர் உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனையை தொடர்ந்து மற்றகால பூஜைகள் நடைபெறும்.
இதற்கிடையே, இந்தாண்டு மாலை அணிந்து விரதம் இருந்த பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரையாக காவடி எடுத்தும், அலகு குத்தியும், பால் குடம் எடுத்தும் குவிந்து உள்ளனர்.
அவர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பல பக்தர்கள் கோவில் கிரிபிரகாரத்தில் அங்கபிரதட்சணம் செய்து வழிபட்டனர்.
மேலும் ஏராளமான பக்தர்கள் பல்வேறு வாகனங்கள் மூலமாக வந்தபடி இருக்கிறார்கள். இதனால் திருச்செந்தூர் நகரமே பக்தர்கள் தலைகளாக காட்சி அளிக்கிறது.
கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் எளிதாக சாமி தரிசனம் செய்ய தனிவரிசை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கடலில் குளிக்கும்போது ஆழமான பகுதிக்கு செல்லாத வகையில் தடுப்பு வேலிகள் போடப்பட்டிருந்தது. அதேபோல் பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் சிலர் கடற்கரையில் மணலால் சுவாமி பூடம் செய்து சூடம் ஏற்றி வழிபட்டு சென்றனர்.
திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் தலைமையிலான போலீசார் போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியிலும், பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர்.