திருமீயச்சூர் திருத்தலம் - பிறவி நீக்கும் நெய்க்குள தரிசனம்
|திருவாரூர் மாவட்டம் திருமீயச்சூர் திருத்தலத்தில் உள்ளது, லலிதாம்பிகை உடனாய மேகநாத சுவாமி திருக்கோவில். லலிதாம்பிகை சன்னிதியில் நடைபெறும் நெய்க்குள தரிசனம் மிகவும் பிரசித்திப் பெற்றது.
திருவாரூர் மாவட்டம் திருமீயச்சூர் திருத்தலத்தில் உள்ளது, லலிதாம்பிகை உடனாய மேகநாத சுவாமி திருக்கோவில். இங்கு சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். லலிதாம்பிகை ஸ்ரீசக்கர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்து அருள்கிறார். கோவிலுக்குள் நுழைந்தவுடன் வலது பக்கத்தில் லலிதாம்பிகை சன்னிதி இருக்கிறது. கருவறையில் வீற்றிருக்கும் லலிதாம்பிகை, வலது காலை மடக்கி, இடது காலை தொங்க விட்ட நிலையில், அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இந்த அன்னைக்கு லலிதா சகஸ்ரநாமம், லலிதா நவரத்ன மாலை படித்து வழிபட்டால், அம்மனின் பரிபூரண அருள் கிடைக்கும் என்கிறார்கள்.
இந்த லலிதாம்பிகை சன்னிதியில் நடைபெறும் நெய்க்குள தரிசனம் மிகவும் பிரசித்திப் பெற்றது. அதுபற்றி இங்கே பார்ப்போம். திருமீயச்சூர் லலிதாம்பிகை அம்மனின் சன்னிதியில் நடத்தப்படும் நெய்க்குள தரிசனம் வருடத்திற்கு மூன்று முறை நடத்தப்படும். அவை, வைகாசி மாத பவுர்ணமி தினம், நவராத்தி விழா கொண்டாடப்படும் இறுதி நாளான விஜயதசமி மற்றும் மாசி மாதத்தில் அஷ்டமி யும், நவமியும் இணையும் தினம் ஆகியவையாகும்.
இந்த தினங்களில் லலிதாம்பிகையின் சன்னிதிக்கு முன்பாக 15 அடி நீளம், 4 அடி அகலத்திற்கு வாழை இலைகளை பரப்பி வைப்பார்கள். அதன் இரு மருங்கிலும் மட்டை மற்றும் தென்னை ஓலைகளைக் கொண்டு அணைபோடுவார்கள். 15 அடி நீளமும் மூன்று பாகமாக பிரிக்கப்படும். அம்பாளின் சன்னிதி முன்பாக அமைந்த முதல் பாகத்தில் சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம், அடுத்ததாக புளியோதரை, இறுதியாக தயிர் சாதம் படைக்கப்படும். சர்க்கரைப் பொங்கலின் நடுவே குளம் போன்று அமைத்து, அதில் அதிக அளவு நெய்யை ஊற்றுவார். இதனால் அதற்கு 'நெய்க்குளம்' என்று பெயர்.
லலிதாம்பிகைக்கு அபிஷேகம் முடிந்ததும் திரையிடப்பட்டு அலங்காரங்கள் செய்யப்படும். அதன்பின்னர் திரையை விலக்கும் போது, நெய்க்குளத்தில் அன்னையின் அலங்கார ரூபம் தெரியும். இதனை 'நெய்க்குள தரிசனம்' என்பார்கள். இந்த தரிசனத்தைக் காணும் பக்தர்களின் வாழ்வில் துன்பங்கள் விலகும். மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம்.
திருவாரூரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 35 கிலோமீட்டர் தூரத்திலும், காரைக்காலில் இருந்து 24 கிலோமீட்டர் தொலைவிலும் இருக்கிறது, திருமீயச்சூர் திருத்தலம்.