பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் நாளை புத்தாண்டு சிறப்பு வழிபாடு
|புத்தாண்டை முன்னிட்டு மூலவர் தங்க கவசத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
திருப்பத்தூர்,
சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் புத்தாண்டு அன்று தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் நாளை (திங்கட்கிழமை) புத்தாண்டை முன்னிட்டு பிள்ளையார்பட்டி கோவிலில் பக்தர்களுக்கு வேண்டிய முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டுள்ளன. ஆங்கில புத்தாண்டு தினத்தன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. மேலும் அன்றைய தினம் மூலவர் தங்க கவசத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்லும் வகையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பிள்ளையார்பட்டிக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளது.