ஈரோடு
புத்தாண்டு பிறப்பு:ஈரோடு கோவில்களில் சிறப்பு வழிபாடு
|புத்தாண்டு பிறப்பையொட்டி ஈரோடு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி ஈரோடு மாவட்டத்தில் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. ஈரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவிலில் நேற்று அதிகாலையில் இருந்தே அம்மனை தரிசனம் செய்ய பக்தர்கள் வந்தனர். கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து வெள்ளிக்காப்பு அலங்காரத்தில் பெரிய மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவிலிலும், கோட்டை பெருமாள் கோவிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. அங்கும் காலையில் இருந்து பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள வலம்புரி விநாயகர் கோவிலில் வழிபாடு நடந்தது. இதில் விநாயகருக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டது. இதேபோல் திண்டல் முருகன் கோவில், சூரம்பட்டி நால்ரோட்டில் உள்ள விநாயகர் கோவில், கள்ளுக்கடைமேடு ஆஞ்சநேயர் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.