< Back
ஆன்மிகம்
நவராத்திரி வழிபாடு
ஆன்மிகம்

நவராத்திரி வழிபாடு

தினத்தந்தி
|
13 Oct 2023 12:30 PM IST

நவராத்திரி வழிபாடு மற்றும் நவராத்திரி அலங்காரங்களை பற்றி தெரிந்து கொள்வோம்...

சுகமான வாழ்வு வேண்டும். கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். வேலையில் மேன்மை அடைய வேண்டும். எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும் வெற்றி மீது வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரும் நவராத்திரி பூஜையை அவசியம் செய்ய வேண்டும். நவராத்திரியின் ஒன்பது நாட்களும் வாசலில் மாவிலை கட்டி பூஜை செய்தால், வீட்டில் செல்வச் செழிப்பு பெருகும்.

தினந்தோறும் நவராத்திரி பூஜையின் நிறைவாக, மஞ்சள், குங்குமம், தாம்பூலம், புத்தாடை போன்ற பலவிதமான மங்கலப் பொருட்களை தானமாக அளிக்க வேண்டும். நவராத்திரி பூஜை நாட்களில் வரும் வெள்ளிக்கிழமைகளில் ஐந்து சுமங்கலிப் பெண்களுக்கு அன்னதானம் செய்து, புடவை மற்றும் தாம்பூலம் கொடுத்து ஆசி பெற்றால், கன்னிப்பெண்களுக்கு திருமண பாக்கியம் விரைவில் கைகூடும்.

நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும், இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும். நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்யா பூஜை செய்வதால் சகல செல்வங்களையும் பெறலாம். நவராத்திரியின் ஒன்பது நாட்களும் பகலில் 1008 சிவ நாமாவளிகளை உச்சரித்து வழிபட்டால், மனதில் நினைக்கும் பலன்கள் கிடைக்கும். நவராத்திரி பூஜைக்கான சுலோகங்கள், மந்திரங்கள் எதுவும் தெரியவில்லையா? கவலையே வேண்டாம். 'ஓம் ஸ்ரீலலிதா தேவியே நம' என்பதை 108 தடவை சொன்னாலே போதும். நினைத்த பலன் கிடைக்கும்.

புரட்டாசியில் வரும் நவராத்திரியை நாம் கொண்டாடு கிறோம். ஆனால், ஆண்டுதோறும் நான்கு விதமான நவராத்திரிகள் வரும். பங்குனி மாதம் அமாவாசைக்குப் பிறகு பிரதமையில் தொடங்கும் லலிதா நவராத்திரி, மாசி மாதம் வரும் ராஜ மாதங்கி நவராத்திரி, ஆடியில் வரும் மகா வராகி நவராத்திரி, புரட்டாசியில் வரும் சாரதா நவராத்திரி ஆகியவை அவை. இந்த நான்கு நவராத்திரிகளையும் முறையாகக் கடைப்பிடிக்கும் பெண்கள், அம்பிகையின் அருளைப் பரிபூரணமாகப் பெறலாம். அதற்கு வாய்ப்பில்லாதவர்கள், புரட்டாசி நவராத்திரியைப் பக்தியுடன் கடைப்பிடிக்கலாம்.

நவராத்திரிஅலங்காரங்கள்

முதல் நாள்:- மது-கைடபர் என்ற அரக்கர்களின் அழிவிற்குக் காரணமாக விளங்கிய குமரி வடிவ அலங்காரம்.

இரண்டாவது நாள்:- மகிஷாசுரனை வதம் செய்யப் புறப்பட்ட ராஜராஜேஸ்வரி அலங்காரம்.

மூன்றாம் நாள்:- மகிஷாசுர வதம் முடித்து, சூலத்தைக் கையிலேந்தி மகிஷத்தின் தலை மீது வீற்றிருக்கும் கல்யாணி வடிவம்.

நான்காம் நாள்:- சிம்மாசனத்தில் அமர்ந்து, இன்னல்களில் இருந்து விடுபட்ட தேவர்களும் முனிவர்களும் செய்யும் தோத்திரங்களை ஏற்று அவர்களுக்கு அருள்பாலிக்கும் ஜெய துர்க்கை அலங்காரம்.

ஐந்தாம் நாள்:- சுகாசனத்தில் வீற்றிருந்து, கம்பன் என்ற அசுரனால் அனுப்பப்பட்ட தூதுவனாகிய சுக்ரீவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கும் பாவனையில் துர்க்கை அலங்காரம்.

ஆறாம் நாள்:- சர்ப்ப ராஜ ஆசனத்தில் அமர்ந்திருக்கும் சண்டிகா தேவி அலங்காரம்.

ஏழாம் நாள்:- சண்ட, முண்டர்கள் என்ற அசுரர்களை வதம் செய்த பின், பொற்பீடத்தில் அமர்ந்து வீணை வாசிக்கும் சாம்பவி கோலம்.

எட்டாம் நாள்:- ரக்தபீஜன் வதைக்குப் பிறகு, கருணை நிறைந்தவளாய், அஷ்ட சித்திகளும் புடைசூழ வீற்றிருக்கும் கோலம்.

ஒன்பதாம் நாள்:- அரக்கர்களை அழித்து முடித்து, கரங்களில் வில், பாசம், அங்குசம், சூலம் ஏந்தியவளாக, சிவசக்தி வடிவமாகக் காட்சி தரும் காமேஸ்வரி கோலம்.

- எம். நிர்மலா, புதுச்சேரி.

மேலும் செய்திகள்