காவிரி நடுவில் அருளும் நட்டாற்றீஸ்வரர்
|காவிரியாற்றின் நடுவில் உள்ள குன்றில் அமைந்த இயற்கை எழில் சூழ்ந்த ஆலயமாக விளங்குகிறது, காங்கயம்பாளையம் நட்டாற்றீஸ்வரர் ஆலயம். அகத்தியர் தன்னுடைய பிரம்மஹத்தி தோஷம் நீங்க வழிபட்ட தலமான இது, இன்றும் பக்தர்களின் அனைத்து தோஷங்களையும் போக்கும் தலமாக திகழ்கிறது.
புராண வரலாறு
திருக்கயிலாயத்தில் சிவன்-பார்வதி திருமண வைபவத்தில் பங்கேற்க, தேவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கயிலாயம் சென்றதால், பூமியின் சமநிலையில் தடுமாற்றம் ஏற்பட்டது. வடக்கு தாழ்ந்தது, தெற்கு உயர்ந்தது. இதனை சரிசெய்ய அகத்தியரை அழைத்த சிவபெருமான், தெற்கில் பொதிகை மலையில் நின்று உலகை சமப்படுத்தும்படி ஆணையிட்டார். 'இறைவன், இறைவியின் திருமணத்தை நம்மால் பார்க்க முடியாதே' என்று அகத்தியர் தயங்கினார். அதற்கு சிவபெருமான், "நீ இருக்கும் இடத்திலேயே என் திருமணக் காட்சியை காணும் பேறு பெறுவாயாக" என்றார். அதன்படி தெற்கு நோக்கி பயணமானார் அகத்தியர்.
இதற்கிடையில் சூரபத்மன் கொடுமையால், சீர்காழியில் மறைந்து வாழ்ந்த தேவர்கள், போதிய நீர் வளமின்றி வாடினர். இதனால் விநாயகரை வழிபட்டனர். அகத்தியரின் கமண்டலத்தில் உள்ள ஆற்று நீரை பூமியில் பாய வைக்க வேண்டினர். அதன்படி அகத்தியர் பயணம் செய்த குடகு மலை வழியில், ஆடுமேய்க்கும் சிறுவனாக தோன்றினார் விநாயகர். அச்சிறுவனிடம் கமண்டலத்தை தந்த அகத்தியர், "நான் சிவ வழிபாடு செய்து முடிக்கும்வரை இந்த கமண்டலத்தை தரையில் வைக்காமல் கையிலேயே வைத்திரு" என்று கூறினார்.
அதற்கு அந்தச் சிறுவன், "சரி ஐயா, ஆனால் ஒரு நிபந்தனை, நான் நேரத்தில் வீடு செல்ல வேண்டும். நேரம் அதிகமானால் நான் தங்களை மூன்று முறை அழைப்பேன். தாங்கள் வரவில்லை என்றால், இதை தரையில் வைத்துவிட்டுச் சென்றுவிடுவேன்" என்றான்.
அகத்தியரும் அதை ஏற்றுக்கொண்டார். ஆனால் அகத்தியர் வழிபாட்டுக்கு சென்ற சிறிது நேரத்திலேயே, அவரை மூன்று முறை அழைத்துவிட்டு, கமண்டலத்தை தரையில் வைத்து விட்டான் சிறுவன். வழிபாடு முடித்துவந்த அகத்தியர் இதைக்கண்டு கோபம் கொள்கிறார். அச்சிறுவனின் தலையில் மூன்று முறை கொட்டுகிறார். அப்போது சிறுவனாக வந்த விநாயகர் மறைந்து, காகமாக வடிவெடுத்து, கமண்டலத்தை கவிழ்த்து விடுகிறார். கமண்டலத்தில் இருந்த நீர் நதியாக பாய்ந்தோடியது. 'காவிரி' எனப்பெயர் பெற்றது. விநாயகர், சுயரூபம் காட்டி அகத்தியருக்கு அருளினார்.
இப்படி காவிரி பாய்ந்தோடிய வழியில் ஏராளமான சிவாலயங்கள் இருந்தன. அவற்றை வழிபட்டபடியே பொதிகை மலைக்குச் சென்றார் அகத்தியர். அப்போது வழியில் வாதாபி, வில்லவன் என்ற இரு அசுரர்கள், வழிப்போக்கர்களாக வருபவர்களை கொன்று சாப்பிட்டு வந்தனர். இதையறிந்த அகத்தியர், அந்த அரக்கர்களுக்கு முடிவுகட்ட எண்ணினார். அதன்படியே அடியார் வேடத்தில் இருந்த வில்லவன் அகத்தியரை சாப்பிட அழைத்து, விருந்து வைத்தான். இலையில் மாம்பழமாக, வாதாபியை வைத்து பரிமாறினான். இதை உணர்ந்த அகத்தியர், அந்த மாங்கனியை முழுமையாக உண்டார். அப்போது வில்லவன், "வாதாபி வெளியே வா" என்று அழைத்தான். அகத்தியரின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியே வர முயன்ற வாதாபியை, தன் மந்திர சக்தியால் வயிற்றிலேயே செரிக்கச் செய்தார். இதனால் கோபம் கொண்ட வில்லவன், அகத்தியரை கொல்ல முயன்றான். அவனையும், பிரம்மாஸ்திர மந்திரத்தால் வதம் செய்தார் அகத்தியர். இதனால் அந்தப் பகுதியில் வாழும் மக்கள், அரக்கர்களின் தொல்லையில் இருந்து விடுபட்டனர்.
அகத்தியரால் அழிவை சந்தித்த வாதாபி, வில்லவன் ஆகிய இரு அரக்கர்களும், அஜமுகி என்ற அசுரப் பெண்ணுக்கும், துர்வாச முனிவருக்கும் பிறந்தவர்கள். எனவே அகத்தியருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷம் நீங்க, சிவ வழிபாடே சிறந்த வழி என்பதை அறிந்த அகத்தியர், காவிரி ஆற்றின் நடுவில் உள்ள குன்றில், மணல் லிங்கம் செய்து, அதற்கு ருத்திராட்ச மாலை அணிவித்து வழிபட்டார். பூஜை முடித்து மாலையை எடுக்க முயன்றபோது அது வரவில்லை. அதற்கு காரணம் இறையருளே என்பதை உணர்ந்த அகத்தியர், பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்றவராக பொதிகை மலைக்கு பயணமானார் என்கிறது தல புராணம்.
ஆலய அமைப்பு
ஆற்றின் கரையில் இருந்து, ஆற்றின் நடுவில் உள்ள குன்றின் கோவிலும், அதைச் சுற்றி பாயும் காவிரி ஆறும் கண்களுக்கு விருந்தாகின்றன. சிறிய குன்றினை அடைய பரிசல் இருந்த காலம் மாறி, தற்போது பாலம் அமைக்கப்பட்டுள்ளதால் எளிதில் அடையலாம். மரங்களும், குன்றும் சேர்ந்த திட்டில் ஆலயம் எழிலாக அமைந்துள்ளது. சிறிய குன்று எளிதில் ஏறி வழிபட எளிதான படிகட்டுகள் உள்ளன. சுவாமி, அம்பாள், முருகன் தவிர, விநாயகர், தட்சிணாமூர்த்தி, நந்திதேவர், சண்டிகேஸ்வரர் மற்றும் நவக்கிரகங்களும், தலமரமான அபூர்வ ஆத்தி மரமும் அமைந்துள்ளன.
காவிரி உற்பத்தியாகும் குடகு மலையில் இருந்து வங்கக் கடலில் சங்கமிக்கும் காவிரிப்பூம்பட்டினம் வரையிலான சுமார் 630கி.மீ. தொலைவின் நடுவிலும், ஆற்றின் இடது கரை, வலது கரை ஆற்றின் நடுவிலும் அமைந்த தலத்தின் இறைவன் என்பதால், நடு+ஆற்று+ஈசர் = நட்டாற்றீஸ்வரராக அழைக்கப்படுகிறார். அகத்தியர் வழிபட்டதால் 'அகஸ்தீஸ்வரர்' என்ற பெயரும் இவருக்கு உண்டு. கிழக்கு முகமாய் காட்சியருள்கின்றார் இத்தல இறைவன்.
கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அன்னை நல்லநாயகி அருள்வழங்குகிறாள். அன்னைக்கு 'அன்னபூரணி' என்ற மற்றொரு பெயரும் உள்ளது. அன்னை மேல் இரு கரங்களில் மலர்கள் தாங்கியும், கீழ் இரு கரங்கள் அபய, வரத முத்திரை காட்டியும் காட்சியருள்கிறாள்.
தமிழ் வருடப் பிறப்பு, கார்த்திகை கடைசி திங்கள் அன்று சுவாமிக்கும், ஆடிப்பூத்தன்று அம்பாளுக்கும் 108 சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது. ஆடி பதினெட்டு, மகாசிவராத்திரி, ஆருத்திரா, தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்தர் சஷ்டி, அமாவாசை, கிருத்திகை ஆகியவை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன.
அமைவிடம்
ஈரோடு - கரூர் வழித்தடத்தில் ஈரோட்டில் இருந்து 10 கி.மீ. தொலைவிலும், கரூரில் இருந்து 52 கி.மீ. தூரத்திலும், சாவடிப்பாளையம் நால்ரோட்டில் இருந்து 2 கி.மீ. தொலைவிலும், காவிரி ஆற்றின் நடுவில் அமைந்துள்ளது, இந்த ஆலயம். பேருந்து மூலம் வருவோர் சாவடிப்பாளையம் இறங்கி செல்ல வேண்டும்.