வள்ளலார் வழி நின்ற மகான் நாராயணகுரு
|கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில், நெய்யாற்றின் கரையில் அமைந்துள்ளது அருவிபுரம். இங்கு நாராயணகுரு என்ற மகானால் கட்டப்பட்ட சிவன் கோவில் ஒன்று இருக்கிறது. அதைப் பற்றி பார்ப்போம்.
1855-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 28-ந் தேதி, திருவனந்தபுரம் அருகில் உள்ள செம்பழந்தி என்ற கிராமத்தில் பிறந்தவர், மகான் நாராயணகுரு. கேரளாவில் தாழ்த்தப்பட்ட சமூகமாக இருக்கும் ஈழவ சமுதாயத்தைச் சேர்ந்தவர் இவர். சிறு வயதிலேயே ஆன்மிக ஈர்ப்பு கொண்டிருந்த இவர், இளம் வயதில் கன்னியாகுமரி மாவட்டம் மருந்துவாழ்மலையில் அமர்ந்து தியானம் செய்து தன்னுடைய ஆன்மிகப் பாதையை வலுப்படுத்திக் கொண்டவர்.
பின்னர் திருவனந்தபுரம் திரும்பியவர், 1888-ம் ஆண்டு திருவனந்தபுரம் அருகில் உள்ள அருவிபுரம் என்ற இடத்தில் முதலாவது சிவன் கோவிலை நிறுவினார். அங்குள்ள நெய்யாற்றில் மூழ்கி நீராடிய நாராயண குரு, தண்ணீரில் இருந்து எழும்போது ஒரு லிங்க வடிவ கல்லோடு மேலே வந்தார். பின்னர் அந்த கல்லை சிவலிங்கமாக நினைத்து அங்கே பிரதிஷ்டை செய்தவர், பூஜைகள் செய்து வழிபட்டார். 'அனைத்து மக்களுக்குமானது இந்த ஆலயம்' என்று அப்போது அவர் கூறினார். தாழ்த்தப்பட்ட மக்கள் ஆலயத்திற்குள்ளேயே அனுமதிக்கப்படாத நேரத்தில், அவா்களுக்காக ஒருவர் ஆலயத்தையே அமைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த வகையில் கேரளாவில் தாழ்த்தப்பட்ட மக்களும் இறைவனை வழிபட எந்த பாகுபாடும் இல்லை என்பதை உணர்த்தும் வகையில் அமைந்த முதலாவது புரட்சி ஆலயமாக இந்த அருவிபுரம் சிவாலயம் அமைந்தது. அதைத் தொடர்ந்து சிவன், விஷ்ணு, சுப்பிரமணியர் ஆகிய தெய்வங்களுக்கு, பல ஆலயங்களை நாராயணகுரு நிறுவினார். மேலும் வள்ளலாரின் வழியில் நின்று, இறைவன் ஒளிமயமானவன் என்பதை விளக்கும் வகையில் கருவறையில் விளக்கையே தெய்வமாக பிரதிஷ்டை செய்தவரும் இந்த நாராயணகுரு மகான்தான். தொடர்ந்து சத்தியம்- தர்மம்- தயவு என்னும் சொற்களை கருவறை தெய்வமாக கொண்டு ஒரு கோவிலையும், மனிதனின் மனசாட்சிதான் மிகப்பெரிய தெய்வம் என்பதை வலியுறுத்தும் வகையில் களவங்கோடு என்ற இடத்தில் நிலைக் கண்ணாடியையும் தெய்வமாக பிரதிஷ்டை செய்து கோவில் அமைத்தார்.
அதோடு தான் அமைத்த கோவில்களை ஒட்டி, பாடசாலைகளையும், களரி முதலான பாரம்பரிய விளையாட்டு பழகும் களங்களையும் அமைத்தார். ஈழவர்களால் மரபுரீதியாக செய்யப்பட்டு வந்த ஆயுர்வேத மருத்துவத்தை வளப்படுத்தும் வகையில் ஆயுர்வேத மருத்துவமனைகளையும், அதனைக் கற்பதற்கான கல்விக் கூடங்களையும் ஏற்படுத்தினார். மகான் நாராயண குருவின் இந்த நடவடிக்கைகள், காலம்காலமாக ஒடுக்கப்பட்டு வந்த ஈழவர் சமுதாய மக்களை அந்த வலியில் இருந்து விடுவிக்கும் மருந்தாக அமைந்தது.
மகான் நாராயண குரு, இந்த அரும்பெரும் சாதனைகளை எல்லாம் செய்வதற்கு உந்து சக்தியாக இருந்தவர், தைக்காடு அய்யா என்ற தமிழர். அவர்தான் மகான் நாராயண குருவுக்கு சிலம்பு, யோகக் கலைகள் போன்றவற்றை கற்றுக்கொடுத்த ஆசானும் கூட. தைக்கா அய்யாவிடம், ஆழமான தமிழ் அறிவையும் மகான் நாராயண குரு கற்றுக்கொண்டார். திருமூலரின் திருமந்திரம், திருக்குறள் போன்ற தமிழ் நூல்களையும் கற்று அறிந்தார். தைக்காடு அய்யாவை சந்தித்ததும், திருமூலரின் திருமந்திரமும் தான், தனது வாழ்க்கையில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தியதாக நாராயண குரு கூறியிருக்கிறார்.