நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் சிறப்புகள்
|நாமக்கல் ஆஞ்சநேயர் எதிரிலுள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார்.
தமிழகத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில். பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் பார்க்க வேண்டிய முக்கிய இடம். 1500 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் நாமக்கல் கோட்டைக்கு கீழே அமைந்துள்ளது.
நகரின் மையத்தில் அமைந்த மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மர், நாமகிரி தாயார் கோவிலுக்கு நேர் எதிரே ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயர் எதிரிலுள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார்.
ராமாயண காலத்தில் சஞ்சீவி மலையில் உள்ள மூலிகையைப் பெறுவதற்காக ஆஞ்சநேயர், இமயத்தில் இருந்து மலையைப் பெயர்த்து எடுத்து வந்தார். பணி முடிந்ததும் மலையை அதே இடத்திலேயே வைத்துவிட்டு திரும்பினார்.
அவ்வாறு வருகையில் அங்கிருந்து ஒரு பெரிய சாளக்கிராமத்தை பெயர்த்து எடுத்து வந்தார். அந்த நேரத்தில் சூரியன் உதயமானதால் வான்வழியாக வந்துகொண்டிருந்த ஆஞ்சநேயர், தமது கையில் இருந்த சாளக்கிராமத்தை கீழே வைத்துவிட்டு சூரிய நமஸ்காரம் செய்தார். மீண்டும் வந்து சாளக்கிராமத்தைத் தூக்க முயற்சித்தார். ஆனால் அதைத் தூக்க அவரால் முடியவில்லை.
அப்போது ராமனுக்கு செய்ய வேண்டிய உதவிகளை செய்து முடித்துவிட்டு பிறகு வந்து என்னை எடுத்துச் செல் என்று அசிரீரி ஒலி கேட்க, ஆஞ்சநேயரும் சாளக்கிராமத்தை அங்கேயே விட்டு விட்டு கிளம்பினார். ராமன் போரில் வென்று சீதையை மீட்ட பிறகு ஆஞ்சநேயர் மீண்டும் அங்கே வந்தார். ஆஞ்சநேயர் விட்டுப் போன சாளக்கிராமம் நரசிம்ம மூர்த்தியாக வளர்ந்து நிற்க, ஆஞ்சநேயர் நரசிம்மரை வணங்கியவாறு நின்று பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
இங்குள்ள ஆஞ்சநேயர் சிலை மிகவும் பிரம்மாண்டமானது. பீடத்திலிருந்து 22 அடியும், பாதத்திலிருந்து 18 அடியும் உயரம் கொண்டதாக உள்ளது. இந்த ஆஞ்சநேயருக்கு கோபுரம் கிடையாது. வெட்டவெளியில் மழையிலும், வெயிலிலும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.