நாகதோஷம் நீக்கும் நாகராஜா ஆலயம்
|ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் இவ்வாலயத்தின் முன்புள்ள அரச மரங்களின் கீழ் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நாகர் சிலைகளுக்கு பக்தர்கள் தங்கள் கையாலேயே மஞ்சள் பொடி தூவி, பால் அபிஷேகம் செய்யலாம்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நகரில் அமைந்துள்ளது, நாகராஜா கோவில். ஆலயம் கிழக்கு பார்த்தது என்றாலும், தெற்கு திசையில் உள்ள கோபுர வாசல் வழியே செல்லும் வழக்கம் காலம் காலமாய் நடக்கிறது. கிழக்கு வாசல் வழியாகவும் கோவிலுக்குள் வர முடியும். கன்னியாகுமரியில் உள்ள குமரி அம்மன் கோவிலுக்கு அடுத்தபடியாக, மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாகவும் நாகர்கோவில் நாகராஜா ஆலயம் திகழ்கிறது. இந்த ஆலயத்தின் பெயரில்தான், இந்த ஊரே உள்ளது என்றும் சொல்லலாம்.
நாக வழிபாடு உள்ள ஆலயங்கள் நம் நாட்டில் பல இருந்தாலும், அவை எல்லாம் சிவன் கோவிலாகத்தான் இருக்கும். ஆனால் இங்கு மூலவரே நாகராஜராக இருப்பது விசேஷம். ஆதிகாலத்தில் இந்தப் பகுதி வயல்கள் சூழ்ந்ததாக இருந்துள்ளது. வயலில் அரிவாளை வைத்து நெற்கதிர்களை அறுத்துக் கொண்டிருந்த ஒரு பெண், நெற்கதிரை அறுக்கும்போது, திடீரென ரத்தம் வந்தது. இதைக் கண்டு பயந்து போன அந்தப்பெண் அருகில் இருந்தவர்களிடம் சொல்ல, அவர்கள் ரத்தம் வந்த இடத்தைப் பார்த்தபோது, அங்கே பாறையொன்றில் ஐந்து தலையுடன் கூடிய நாகர் உருவம் இருந்தது. அந்த நாகர் சிலையின் மேற்பகுதியில் இருந்துதான் ரத்தம் வந்து கொண்டிருந்தது. பின்பு அந்த நாகர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்து அந்தப் பகுதி மக்கள் அனைவரும் வழிபட்டனர். இதையடுத்து ரத்தம் வருவது நின்றது. எனவே அந்தப் பகுதி மக்கள், தினமும் அந்த சிலைக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடத் தொடங்கினர். இதனால் அந்த மக்களின் வாழ்க்கையில் துன்பங்கள் அகன்று, வசந்தம் வீச ஆரம்பித்தது.
முதலில் குடிசைப் போட்டு சிலையை வைத்து ஆராதித்து வந்தனர். ஒரு முறை சரும நோயால் பாதிக்கப்பட்ட களக்காடு பகுதியை ஆண்டுவந்த மன்னன் மார்த்தாண்டவர்மா, இந்தக் கோவிலுக்கு வந்தார். அவர் நாகராஜருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டு நோய் நீங்கப் பெற்றார். இதனால் மகிழ்ந்த மன்னன், அவ்விடத்திலேயே நாகராஜாவுக்கு ஆலயம் எழுப்பினார். ஆனால் கருவறை மட்டும் நாகங்கள் வசிப்பதற்கேற்ப, ஓலைக் கூரையாலேயே வேயப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் இத்தல அர்ச்சகர்களே ஓலைக் கூரையைப் பிரித்து விட்டு, புதிய கூரையை வேய்கிறார்கள். கேரள கட்டிடப் பாணியில் இந்த ஆலயம் அமையப்பெற்றுள்ளது. இந்தக் கோவிலை நாகங்களே பாதுகாப்பதாக சொல்லப்படுகிறது.
கருவறையில் நாகராஜர் ஐந்து தலைகளுடன் சுயம்புவாக காட்சி தருகிறார். இத்தலத்தில் தர்னேந்திரன் என்ற ஆண் நாகமும், பத்மாவதி என்ற பெண் நாகமும் துவாரபாலகர்களாக உள்ளனர். மூலவர் நாகராஜாவின் எதிரில் உள்ள தூணில் நாகக்கன்னி சிற்பம் இருக்கிறது. கருவறையில் நாகராஜா இருக்கும் இடம் மணல் திட்டாக உள்ளது. மேலும் வயல் இருந்த இடம் என்பதால் எப்போதும் இவ்விடத்தில் நீர் ஊறிக்கொண்டே இருக்கிறது. இது இன்றும் காணக் கூடிய ஒரு அதிசய நிகழ்வாகும். இந்த நீருடன் சேர்ந்த மணலையே, கோவில் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்குகிறார்கள். இந்த மணலானது ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை கருப்பு நிறத்திலும், தை மாதம் முதல் ஆனி மாதம் வரை வெள்ளை நிறத்திலும் மாறிக் கொண்டே இருப்பது அதிசயிக்கத்தக்க ஒன்றாகும்.
நாகராஜர் சன்னிதிக்கு வலது புறம் காசி விஸ்வநாதர், அனந்த கிருஷ்ணன் மற்றும் கன்னி மூல கணபதி சன்னிதிகள் அமைந்துள்ளன. தினமும் நாகராஜருக்கு பூஜைகள் நடைபெற்று முடிந்த பின்னர்தான், இவர்களுக்கு பூஜைகள் நடைபெறும். அர்த்த ஜாம பூஜையில் மட்டும் அனந்த கிருஷ்ணருக்கு முதல் பூஜை நடைபெறுகிறது. இத்தல காசி விஸ்வநாதருக்கு சிவராத்திரி மற்றும் பிரதோஷ நாட்கள் விசேஷமானவை. இந்த இரு தினங்களிலும் காசி விஸ்வநாதர் மற்றும் நாகராஜாவுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தால் இன்பம் பெருகும்.
இந்தக் கோவிலின் பிரதான மூலவர் நாகராஜர் என்றாலும், அனந்த கிருஷ்ணர் சன்னிதிக்கு எதிரிலேயே கொடிமரம் இருக்கிறது. தை மாதத்தில் அனந்த கிருஷ்ணருக்கே பிரம்மோற்சவமும் நடக்கிறது. அப்போது அனந்தகிருஷ்ணர் திருத்தேரில் எழுந்தருள்வார். தைமாத ஆயில்ய தினத்தன்று ஆராட்டு வைபவமும் நடைபெறும். பெருமாள் கோவில்களில் கொடி மரத்தின் உச்சியில் கருடன் இருப்பது வழக்கம். ஆனால் இங்கு ஆமை உள்ளது. பாம்பும், கருடனும் பகைவர்கள் என்பதால், இத்தல பெருமாள் சன்னிதியின் கொடி மரத்தில் ஆமை இருப்பதாக ஐதீகம் கூறப்படுகிறது.
ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இத்தலத்தில் வழிபாடு செய்கிறார்கள். ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் இவ்வாலயத்தின் முன்புள்ள அரச மரங்களின் கீழ் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நாகர் சிலைகளுக்கு பக்தர்கள் தங்கள் கையாலேயே மஞ்சள் பொடி தூவி, பால் அபிஷேகம் செய்யலாம். இவ்வாலயத்தில் தினமும் காலை 10 மணிக்கு மூலவர் நாகராஜாவுக்கு பால் அபிஷேகம் நடைபெறுகிறது.