< Back
ஆன்மிகம்
முன்னேற்றம் தரும் முருகன் ஆலயங்கள்
ஆன்மிகம்

முன்னேற்றம் தரும் முருகன் ஆலயங்கள்

தினத்தந்தி
|
16 Jun 2023 10:26 AM IST

* அலங்காரச் சிறப்புடையவர் முருகப்பெருமான். சுவாமிமலை திருக்கோவில் மூலவருக்கு விபூதி அபிஷேகம் செய்யும்போது அருள் படைத்த ஞானியாகக் காட்சித் தருவார். சந்தன அபிஷேகத்தில் பாலசுப்பிரமணியராகக் கம்பீரமாகக் காட்சி தருவார். கருவறையை உற்றுப் பார்த்தால் சுவாமிநாதர் நிற்கும் பீடம் சிவலிங்க ஆவுடையாகவும், அதன்மேல் நிற்கும் பெருமான் பாணலிங்கமாகவும் காட்சித் தருவார்.

* கோவை மாவட்டத்திலுள்ள செஞ்சேரி மலை முருகன் கோவிலில் மூலவரின் ஆறு முகங்களையும் ஒருசேரக் காண முடியும். மயில் வாகனம் இடப்பக்கம் தலையை வைத்திருக்கிறது. மேலும் கரத்தில் சேவல் கொடிக்குப் பதிலாக சேவலையே கொண்டுள்ளார் முருகன். முருகப்பெருமானின் இத்தகைய தனித்த உருவம் மிகவும் அபூர்வமானது.

* மயில்களை அதற்குரிய இயல்பான நிறத்தில் தான் பார்ப்போம். ஆனால் திருப்பரங்குன்றத்தில் வெள்ளை மயில்களைக் காணலாம். சுப்பிரமணியரின் தரிசனத்திற்காக தேவர்களும், மகரிஷிகளும் வெள்ளை மயில் வடிவில் வருவதாக ஐதீகம்.

* அறுபடை வீடுகளிலேயே வேலுக்கு அபிஷேகம் நடக்கும் திருத்தலம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் மட்டும்தான். இது குடவரைக் கோவில் ஆதலால் மூலவருக்கு அபிஷேகம் கிடையாது. வேலுக்கே அபிஷேகம் நடைபெறும்.

* தேனி மாவட்டம் தெப்பம்பட்டியில் உள்ள மா ஊற்று வேலப்பன் திருக்கோவிலில் வேலப்பர் சுயம்பு மூர்த்தி. கோவிலின் அருகில் உள்ள மாமரத்தினடியிலிருந்து எப்போதும் வற்றாத ஊற்று நீர் பொங்கிக் கொண்டே இருக்கிறது.

* குன்றக்குடியில் முருகன், வள்ளி, தெய்வானை மூவரும் ஆளுக்கொரு மயில் மீது ஆரோகணித்துள்ளனர்.

* கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகிலுள்ள மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் முருகனுக்கு சிலை இல்லை. கருவறையில் இரண்டு அடி உயரத்தில் உள்ள பீடத்தையே முருகனாக வழிபடுகின்றனர்.

* திருப்பரங்குன்றத்தில் துர்க்கையின் வலது பக்கம் முருகன், இடதுபக்கம் விநாயகர், முருகனுக்கு அருகில் மகாவிஷ்ணு, விநாயகருக்குப் பக்கத்தில் பரமேஸ்வரன் ஆகியோர் காட்சியளிக்கின்றனர். சைவம், வைணவம், சாக்தம், கவுரமாரம், காணாபத்யம் ஆகிய ஷண்மத தெய்வங்களையும் ஒரே இடத்தில் நின்று தரிசிக்கும் அமைப்பு இத்தலத்தில் மட்டுமே உள்ள சிறப்பு என்பார்கள்.

* திருச்செந்தூரில் குமார ஆகமம் மற்றும் சிவாகமம் ஆகிய இரண்டு விதங்களில் பூஜை நடைபெறுகிறது.

* 60 தமிழ் வருடங்களை நினைவுபடுத்தும் விதமாக 60 படிகளைக் கொண்டது சுவாமிமலை. வருடத்தின் மொத்த நாட்களைக் குறிக்கும் விதமாக 365 படிகளைக் கொண்டது திருத்தணி மலை.

ராமதாஸ், புதுச்சேரி.

மேலும் செய்திகள்