< Back
ஆன்மிகம்
மொடச்சூர், பட்லூர் பகுதிகளில்கோவில்களுக்கு சொந்தமான ரூ.61½ கோடி நிலம் மீட்பு
ஈரோடு
ஆன்மிகம்

மொடச்சூர், பட்லூர் பகுதிகளில்கோவில்களுக்கு சொந்தமான ரூ.61½ கோடி நிலம் மீட்பு

தினத்தந்தி
|
25 July 2023 5:30 AM IST

மொடச்சூர், பட்லூர் பகுதிகளில் கோவில்களுக்கு சொந்தமான ரூ.61½ கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டது.

கடத்தூர்

மொடச்சூர், பட்லூர் பகுதிகளில் கோவில்களுக்கு சொந்தமான ரூ.61½ கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டது.

4.54 ஏக்கர் நிலம்

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள மொடச்சூரில் பிரசித்தி பெற்ற தான்தோன்றியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் 4.54 ஏக்கர் நிலத்தை சின்ன மொடச்சூரை சேர்ந்த ஒருவர் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் குத்தகைக்கு எடுத்து, வீடு கட்டி வசித்ததுடன், விவசாயமும் செய்து வந்தார்.

மேலும் அவர் 15 ஆண்டுகளாக குத்தகை செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் கோவில் நிர்வாகம் சார்பில் வீட்டையும், நிலத்தையும் விட்டு வேளியேற வேண்டும் என நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் அவர் வீட்டை காலி செய்ய மறுத்தார். இதைத்தொடர்ந்து திருச்சி வருவாய் நீதிமன்றத்தில் கோவில் நிா்வாகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், வீட்டை காலி செய்ய உத்தரவிட்டது.

மீட்பு

இதைத்தொடர்ந்து உதவி ஆணையர் அன்னக்கொடி, ஆலய நிலங்கள் மீட்பு தாசில்தார் கவுசல்யா, கோவில் செயல் அலுவலர்கள் ஸ்ரீதர், ரத்தினாம்பாள், அறநிலையத்துறை ஆய்வாளர் ஹரி ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன் கோவில் நிலத்தில் கட்டப்பட்டிருந்த வீட்டை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர். மேலும் விவசாய நிலத்தையும் அதிகாரிகள் மீட்டனர். மீட்கப்பட்ட கோவில் நிலத்தின் மதிப்பு ரூ.60 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அம்மாபேட்டை

இதேபோல் அம்மாபேட்டை அருகே பட்லூரில் கரியகாளியம்மன் கோவிலுக்கு சொந்தமான 12.40 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் 4.65 ஏக்கர் நிலத்தை அந்த பகுதியை சேர்ந்த 6 பேர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த வழக்கு ஈரோடு இணை ஆணையர் கோர்ட்டில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த கோர்ட்டு கோவில் நிலத்தை மீட்க உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து பட்லூரில் உள்ள 4.65 ஏக்கர் கோவில் நிலம் மீட்கப்பட்டு கோவில் தக்கார் ப.சந்திரகலாவிடம் ஒப்படைப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் அன்னக்கொடி, இந்து சமய அறநிலையத்துறை தனி தாசில்தார் கவுசல்யா, அந்தியூர் சரக ஆய்வாளர் மாணிக்கம், அந்தியூர் செல்லீஸ்வரர் வகையறா கோவில் செயல் அலுவலர் சீத்தாராமன், துணை கலெக்டர் குப்புசாமி, தாசில்தார் பழனிச்சாமி, கிராம நிர்வாக அலுவலர் அழகுராஜ், பட்லூர் கிராம நிர்வாக அலுவலர் முருகேசன், கோவில் பணியாளர்கள், வெள்ளித்திருப்பூர் போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர். பட்லூரில் மீட்கப்பட்ட கோவில் நிலத்தின் மதிப்பு ரூ.1½ கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்