< Back
ஆன்மிகம்
மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் கோலாகலம்; நாளை திருக்கல்யாணம்
ஆன்மிகம்

மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் கோலாகலம்; நாளை திருக்கல்யாணம்

தினத்தந்தி
|
20 April 2024 10:15 AM IST

மதுரை சித்திரை திருவிழாவில் நேற்று மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.

இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நடந்து வருகிறது. 8-ம் நாள் விழாவான நேற்று இரவில் முக்கிய நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப்பட்டது. இதை முன்னிட்டு காலையில் தங்கப் பல்லக்கில் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் எழுந்தருளி கீழசித்திரை வீதி, தெற்குஆவணி மூலவீதி, திண்டுக்கல் ரோடு வழியாக மேலமாசி வீதி ஆதீனம் கட்டுச்செட்டி மண்டகப்படியில் காட்சி அளித்தனர். அங்கிருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு கோவிலை அடைந்தனர்.

தொடர்ந்து மீனாட்சி அம்மனின் ஆட்சி தொடங்குவதை நினைவுப்படுத்தும் வகையில் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேக விழா அம்மன் சன்னதி ஆறுகால பீடத்தில் தொடங்கியது. காப்பு கட்டிய வைரம் என்ற பைரவ சுந்தர பட்டர் மற்றும் ஸ்தானிக பட்டர்கள் ஹலாஸ், செந்தில் ஆகியோர் பட்டாபிஷேக பூஜைகளை நடத்தினர். இரவு 7.45 மணிக்கு மீனாட்சி அம்மனுக்கு ராயர் கிரீடம் எனப்படும் வைர கிரீடம் சூட்டி கோலாகலமாக விழா நடந்தது. தொடர்ந்து, நவரத்தினங்கள் பதித்த தங்க செங்கோலும் வழங்கப்பட்டது. அம்மனுக்கு மீன்கொடியும் வழங்கப்பட்டது. இளஞ்சிவப்புடன் கூடிய நீல நிற பட்டு புடவையில் காட்சி தந்த மீனாட்சி அம்மனுக்கு, பரிவட்டம் கட்டி வேப்பம்பூ மாலையும் அணிவிக்கப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு தீபாராதனையும் நடந்தது.

மீனாட்சி அம்மனிடமிருந்த செங்கோலை அம்மனின் பிரதிநிதியாக கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன் பெற்றுக்கொண்டார். செங்கோலுடன் சுவாமி சன்னதி 2-ம் பிரகாரம் வழியாக வலம் வந்து மீண்டும் மீனாட்சி அம்மனிடம் கொடுத்தார். முதன்முறையாக மீனாட்சி அம்மன் கோவில் பட்டாபிஷேக விழாவில் பெண் ஒருவர் செங்கோல் பெற்றது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இணை கமிஷனர் கிருஷ்ணன் மற்றும் அறங்காவலர்கள் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் மீனாட்சி அம்மன் பட்டத்து அரசியாக வெள்ளி சிம்மாசனத்தில் அமர்ந்து நான்கு மாசி வீதிகளிலும் பவனி வந்து காட்சி தந்தார். பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மற்றொரு வெள்ளி சிம்மாசனத்தில் வீதி உலா வந்தனர். பட்டத்து அரசியான மீனாட்சியை காண 4 மாசி வீதிகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதன் மூலம் மதுரையில் நேற்று முதல் மீனாட்சி அம்மன் ஆட்சி தொடங்கியது.

பட்டத்து அரசியான பின்பு சிவபெருமானை அம்மன் போருக்கு அழைக்கும் நிகழ்வை நினைவூட்டும் திக்கு விஜயம் இன்று இரவில் மாசி வீதிகளில் நடக்கிறது. நாளை (21-ந் தேதி) சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. . திருக்கல்யாண மேடை ரூ.30 லட்சம் செலவில் பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.

திருக்கல்யாணத்தை காண தரிசன கட்டணமாக ரூ.500, ரூ.200 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த டிக்கெட் பெற்ற 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வடக்கு கோபுரம் வழியாகவும், இலவசமாக திருக்கல்யாணத்தை காண்பவர்கள் தெற்குகோபுரம் வழியாகவும், மிக முக்கிய பிரமுகர்கள் மேற்கு கோபுரம் வழியாகவும் அனுமதிக்கப்படுவார்கள். திருக்கல்யாணத்தை காண வரும் அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்தது. திருவிழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன், அறங்காவலர்கள் பி.கே.எம்.செல்லையா, டாக்டர் சீனிவாசன், சுப்புலட்சுமி, மீனா மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்