மயிலாடுதுறை கோவில் தேரோட்டம்
|தருமபுர ஆதீனகர்த்தர் சிவிகை பல்லக்கில் எழுந்தருள, பக்தர்கள் சுமந்து செல்லும் பட்டணப் பிரவேசம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் ஞானாம்பிகை உடனான ஞானபுரீஸ்வரர் சாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 11 நாட்கள் நடைபெறும் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு கடந்த 20-ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது.
கடந்த 26-ந்தேதி இரவு திருக்கல்யாண விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியாக இன்று தேர் திருவிழா நடந்தது. சாமி, அம்பாள் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் இரண்டு தேர்களில் எழுந்தருளினர்.
இதனையடுத்து தீபாராதனைக்குப் பின்னர் தேரோட்டம் தொடங்கியது. தருமபுரம் ஆதீனத்தின் 4 ரத வீதிகளில் தேரோட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தருமபுர ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், பள்ளி மாணவ-மாணவிகள், பக்தர்கள் என ஏராளமானோர் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான தருமபுர ஆதீனகர்த்தர் சிவிகை பல்லக்கில் எழுந்தருள, பக்தர்கள் சுமந்து செல்லும் பட்டணப் பிரவேசம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.