நம்பிக்கையினால் மேன்மை பெறுவோம்...
|நம் வாழ்வின் ஒவ்வொரு சூழ்நிலையிலும் நாம் கர்த்தரை நம்புவோம், வாழ்க்கையில் மேன்மை அடைவோம்..
விசுவாசம் என்பது எதிர்பார்க்கிற காரியங்கள் நிச்சயமாக நடக்கும் என்று உறுதியாக நம்புவதாகும்; பார்க்க முடியாத காரியங்கள் நிஜமானவை
என்பதற்குத் தெளிவான அத்தாட்சியைக் காண்பதாகும்". (எபிரெயர் 11:1)
விசுவாசம் (நம்பிக்கை) என்பது நாம், நம்பப்படுகிறவைகளின் உறுதியும், நம் கண்ணால் காணப்படாதவைகளின், நிச்சயமுமாயிருக்கிறது. விசுவாசம் இல்லாமல் தேவனுக்கு பிரியமாய் இருப்பது கூடாத காரியம். ஏனென்றால் தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும் அவர் தம்மை தேடுகிறவர்களுக்கு பலன் அளிக்கிறவர் என்றும் நிச்சயம் நம்ப வேண்டும்.
ஆபிரகாம் தேவனால் அழைக்கப்பட்டபோது, விசுவாசத்தினாலே, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டு போனான். இன்றைக்கு நாம் ஒரு முன் பின் தெரியாத இடத்திற்கு போக வேண்டும் என்றிருந்தால், உடனே அவ்விடத்தை பற்றி தெரிந்தவர்களிடம் விசாரிப்போம். நவீன தகவல் தொழில்நுட்பம் மூலம் அலசி ஆராய்வோம், அவ்விடத்தில் தங்குவதற்கு என்ன செய்வது, சாப்பிடுவதற்கு என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருப்போம். ஆனால் ஆபிரகாமோ இவற்றில் ஒன்றையும் செய்யவில்லை. தேவன் சொல்லிய வார்த்தைகளுக்கு அப்படியே கீழ்ப்படிந்தார்.
வேதம் சொல்வதைப் பார்ப்போம்: "கர்த்தர் ஆபிராமை நோக்கி, நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு. நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன். நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன். பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்" என்றார்.
கர்த்தர் தனக்கு சொன்னபடியே ஆபிரகாம் புறப்பட்டுப்போனான். ஆரான் என்ற தன்னுடைய ஊரை விட்டுப் புறப்பட்டபோது, ஆபிரகாம் எழுபத்தைந்து வயதுள்ளவனாயிருந்தான். "ஆபிராம் தன் மனைவியாகிய சாராவையும், தன் சகோதரனுடைய குமாரனாகிய லோத்தையும், தாங்கள் சம்பாதித்திருந்த தங்கள் சம்பத்தெல்லாவற்றையும், ஆரானிலே சவதரித்திருந்த ஜனங்களையும் கூட்டிக்கொண்டு, அவர்கள் கானான் தேசத்துக்குப் புறப்பட்டுப்போய், கானான் தேசத்தில் சேர்ந்தார்கள்". (ஆதியாகமம் 12:5) இந்த வேதாகம சம்பவத்தில் ஆபிராம் கர்த்தருடைய வார்த்தைக்கு அப்படியே கீழ்ப்படிந்து தன்னுடைய குடும்பம், பணியாளர்கள், கால்நடைகள் எல்லாவற்றோடும் முன்பின் அறியாத ஊருக்கு புறப்பட்டுச் சென்றார்.
தேவன் அவன் நம்பிக்கையை பலப்படுத்தி, அவனை வானத்து நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரை மணலைப் போலவும் பெருகப் பண்ணினார்.
அது மட்டுமில்லாமல் தேவன் ஆபிராமை பார்த்து, "பயப்படாதே, நான் உனக்குக் கேடகமும், மகா பெரிய பலனுமாயிருக்கிறேன்" என்றார். (ஆதியாகமம் 15:1)
நாம் இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையில் எப்படி இருக்கிறோம். சூழ்நிலைகளை பார்த்து கலங்கி, பயப்படுகிறோமா, என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நிற்கின்றோமா!
அன்பானவர்களே, இந்த உலக வாழ்க்கையில், நாம் சூழ்நிலைகளைப் பார்த்து வாழாமல், சூழ்நிலைகளை நமக்கு சாதகமாக மாற்றுகிற தேவனை நம்பி வாழ்ந்தால் ஆபிரகாமுடைய வாழ்க்கையில் அதிசயங்கள், அற்புதங்கள் செய்த தேவன் நம்முடைய வாழ்விலும் நன்மையான காரியங்களைச் செய்வார். பல நேரங்களில் நமக்கு கிடைக்க வேண்டிய நன்மைகளை, சூழ்நிலை நமக்கு 'இல்லை' என்றே கூறும். ஆனால் நம்பிக்கையில் நாம் உறுதியாக இருந்து, நிச்சயமாக பெற்றுக்கொள்வோம் என்று கர்த்தரையே நம்பிக் காத்திருந்தால், எப்படிப்பட்ட சூழ்நிலையிலும், இறைவனின் கரம் உங்களோடு இருந்து உங்களை வழிநடத்தும். அது மட்டுமில்லாமல், அவரை மட்டுமே நம்பி உறுதியாய் செயல்படுகிற உங்களின் ஆசைகளையும், மன விருப்பங்களையும், கனவுகளையும், ஏக்கங்களையும் அவர் நிறைவேற்றுவார். எதிர்காலத்தைக் குறித்த பயங்கள், திகில்கள், கலக்கங்கள் சூரியனைக் கண்ட பனிபோல் மறைந்து விடும்.
மறைந்த ஏவுகணை விஞ்ஞானியும், இந்திய ஜனாதிபதியுமான ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்கள் 'கனவு காணுங்கள்... அந்த கனவை செயல்படுத்த முயற்சி செய்யுங்கள்' என்று கூறுகிறார். நாமும் நம் வாழ்க்கையில் குறிப்பிட்ட ஒன்றிற்காக முயற்சிப்போம். அதற்காக இறைமகன் இயேசுவிடம் விண்ணப்பம் செய்து பிரார்த்தனை ஏறெடுப்போம். இறைவனுடைய வார்த்தைகளுக்கு செவிகொடுத்து அதன்படி நடப்போம்.
முயற்சி நம்முடையது தான், ஆனால் பலனோ இறைவனுடையது. நாம் விரும்பியது எவ்வளவு உயர்வானதாக இருந்தாலும், சூழ்நிலைகள் மொத்தமும் அதற்கு எதிராக நின்றாலும், நம்முடைய முயற்சிகளில் தோற்றுப்போகாமல் வெற்றியை நோக்கி, உயர்வை நோக்கி நம்மை வழிநடத்த இயேசு போதுமானவர்.
ஆகவே சூழ்நிலைகள், போராட்டங்கள், அவமானங்கள், வேதனைகள், கண்ணீர்கள், எதிர்ப்புகள், நிராகரிப்புகள் மத்தியிலும் இயேசு உங்களை நிச்சயமாக உயர்த்துவார், வழி நடத்துவார்.
வேதம் சொல்கிறது, "ஆனாலும் கர்த்தாவே நீர் கேடகமும், என் மகிமையும் என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர்". ஆம், நம் வாழ்வின் ஒவ்வொரு சூழ்நிலையிலும் நாம் அவரையே நம்புவோம், வாழ்க்கையில் மேன்மை அடைவோம். கர்த்தரை நம்புவோம், காரிய சித்தி அடைவோம். கர்த்தருக்கு சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.