< Back
ஆன்மிகம்
மனதை மயக்கும் மாயக்கண்ணனின் கோகுலம்
ஆன்மிகம்

மனதை மயக்கும் மாயக்கண்ணனின் கோகுலம்

தினத்தந்தி
|
11 July 2023 8:02 PM IST

கிருஷ்ணர் பிறந்த மதுராவில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில், தென்கிழக்கு திசையில் மனதை மயக்கும் யமுனை நதிக்கரையில் அமைந்திருக்கிறது, இந்த கோகுலம்.

கிருஷ்ணரும், பலராமரும் ஓடி விளையாடி, யசோதைக்கும், கோபியா்களுக்கும் சொல்ல முடியாத அளவுக்கு மகிழ்ச்சியை அளித்த இடம், கோகுலம். இன்றைய இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில், கிருஷ்ணர் பிறந்த மதுராவில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில், தென்கிழக்கு திசையில் மனதை மயக்கும் யமுனை நதிக்கரையில் அமைந்திருக்கிறது, இந்த கோகுலம்.

மதுராவில், வசுதேவருக்கும், தேவகிக்கும் மகனாகப் பிறந்தவர், கிருஷ்ணர். தன் தாயும் தந்தையும் சிறையில் இருந்த காலகட்டத்தில் பிறந்தார், கிருஷ்ணர். கம்சனால் கிருஷ்ணரின் உயிருக்கு ஆபத்து என்பதால், அவர் கோகுலத்தில் வாழும் நந்தகோபர்- யசோதை தம்பதியரிடம் வளர்ந்தார். யோகமாயை தேவியின் செயலால், சிறையில் இருந்த வசுதேவரின் சங்கிலிகள் அறுந்தன, சிறைக் கதவுகள் தானாகத் திறந்தன, சிறை காவலர்கள் ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றனர். அதன்பின் வசுதேவர், குழந்தை கிருஷ்ணரை, கூடையில் வைத்து எடுத்துச் சென்று யமுனை நதியைக் கடந்து கோகுலத்தில் கிருஷ்ணரை சேர்த்து விட்டு, அங்கு யசோதைக்கு பிறந்திருந்த பெண் பிள்ளையுடன் மீண்டும் மதுரா வந்து சிறையில் அடைபட்டார். யோக மாயையின் இந்த செயல் அனைத்தும், கண் விழித்து எழுந்தபோது, வசுதேவருக்கே மறந்து போயிருந்தது.

நந்தகோபரின் இல்லம், மகாவனம் என்ற பகுதியைச் சேர்ந்த கோகுலத்தில் இருந்தது. கோகுலத்தில் தான் வளர்ந்த காலகட்டத்தில், கிருஷ்ணர் எண்ணிலடங்காத லீலைகளை அரங்கேற்றினார். நந்தகோபரின் இல்லங்கள், 'நந்த பவனம்' என்று அழைக்கப்படுகின்றன. இதன் சிறப்பு என்னவென்றால், இங்குதான் முதன் முதலில் கிருஷ்ணரின் பிறந்த தினமும், கிருஷ்ண- பலராமரின் குழந்தைப் பருவ லீலைகளும் ஆரம்பமாயின. வசுதேவர், கோகுலத்தில் கிருஷ்ணரை விட்டுச் சென்ற பின்னர், மறுநாள் காலை நந்த பவனத்தை மையமாகக் கொண்டு இயங்கிய கோகுலமே விழாக்கோலம் பூண்டது. யசோதைக்கு குழந்தை பிறந்த செய்தியை அறிந்த கோகுலத்து மக்கள் அனைவரும், ஆடம்பர உடையணிந்து, பரிசுப் பொருட்களுடன் மகிழ்ச்சியுடன் நந்த பவனத்தில் திரண்டனர். கோகுலம் எவ்வளவு செல்வச் செழிப்பாக இருந்தது என்பதை, புராணங்கள் எடுத்துரைக்கின்றன. கிருஷ்ணர் பிறந்ததை கோலாகலமாக கொண்டாட நினைத்த நந்தகோபர், அரண்மனை முழுவதையும் மலர்களாலும், பட்டுத்துணிகளாலும் அலங்கரித்திருந்தார். எங்கும் நறுமணப் பொருட்களின் வாசம் வீசியது.

கோகுலவாசிகள் வீதி முழுவதும் ஒருவர் மீது ஒருவர், தயிர், பால் மற்றும் வெண்ணெயை தெளித்து தங்களின் ஆனந்தத்தை வெளிப்படுத்தினர். கிருஷ்ணரின் முக வசீகரம், பேரொளி பொருந்திய திருமேனி, அவரது புன்முறுவல் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்ட கோகுலவாசிகள், தங்களின் இதயத்தில் பேரானந்தத்தின் அலையை உணர்ந்தனர்.

நந்தகோபர் 18 லட்சம் பசுக்களை தானமாகக் கொடுத்தார். கோகுலத்தில் இருந்த அனைத்து பசுக்களும் முத்து மாலை மற்றும் தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன என்று கூறப்பட்டிருப்பதன் மூலம் கோகுலத்தின் செல்வச் செழிப்பை நாம் உணர முடியும். கோகுலத்திற்கு தற்போது பயணம் மேற்கொள்பவர்கள், நந்தபவனில் கம்பீரமாக காட்சியளிக்கும் 84 தூண்களைக் காணலாம். 5 ஆயிரம் வருடத்திற்கு முன் நந்தகோப மகாராஜரின் காலத்தில் கட்டப்பட்ட தூண்கள் இன்றும் இவ்விடத்தில் போற்றி பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவ்விடம் தற்போது கோவிலாக மாற்றப்பட்டுள்ளது. இவ்வாலயத்தில் நந்கோபர்- யசோைத மூர்த்தங்களுக்கு நடுவே கருமை நிறத்தில் பலராமரின் விக்கிரகத்தையும், தொட்டிலில் புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணரின் விக்கிரகத்தையும் காணலாம்.

நந்த பவனத்திற்கு வெகு அருகில் நந்தகோபரின் கோசாலை அமைந்துள்ளது. இந்த கோசாலைக்கு சற்று தூரத்தில் சப்த-சமுத்திர கிணறு உள்ளது. இந்தக் கிணற்றில் பிரபஞ்சத்தில் காணப்படும் ஏழு சமுத்திரங்களின் நீர் உள்ளடங்கி இருப்பதாக சொல்கிறார்கள். யாதவ மன்னரான நந்தகோப மகாராஜா, பாரம்பரிய வழக்கமாக இந்த கிணற்றில் தினந்தோறும் நீராடுவாராம். தெரியாமல் செய்யும் பாவங்களில் இருந்து விடுபட, இந்தக் கிணற்று நீர் உதவுவதாக ஐதீகம்.

அசுர வதம் நிகழ்ந்த இடங்கள்

கிருஷ்ணர் தோன்றிய சில தினங்களில் கம்சனின் ஆணையை ஏற்று, பகாசுரனின் சகோதரியான பூதனை கிருஷ்ணரைக் கொல்வதற்காக தனது மார்பில் விஷத்தைத் தடவிக் கொண்டு கோகுலத்திற்கு வந்தாள். அவளிடம் பால் அருந்திய கிருஷ்ணர், அவளது உயிரையும் சேர்த்துக் குடித்தார். அதே போல் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த கிருஷ்ணரை, மாட்டு வண்டி உருவத்தில் வந்த சகடாசுரன் கொல்ல முயன்றான். அவனை தன்னுடைய காலால் எட்டி உதைத்து வதம் செய்தார், கிருஷ்ணர். திருணாவ்ருதன் என்ற அசுரன், கிருஷ்ணரை கொல்ல வந்திருந்தான். அப்போது யசோதையின் கையில் இருந்த கிருஷ்ணர், தன்னுடைய எடையை அதிகரித்தார். இதனால் பாரம் தாங்காமல் கிருஷ்ணரை, கீழே விட்டாள் யசோதை. அப்போது திருணாவ்ருதன் கிருஷ்ணரை தூக்கிக் கொண்டு அந்தரத்தில் பறந்தான். அங்கேயே அவனை வதம் செய்தார், கிருஷ்ணர். இந்த மூன்று அசுரர்களும் வதம் செய்யப்பட்ட இடத்தை, இன்றும் கோகுலத்தில் காண முடியும்.

கண்ணன் கட்டுண்ட உரல்

நந்த பவனத்திற்கு வெகு அருகில் கிருஷ்ணர், தாமோதர லீலையை அரங்கேற்றிய தலமும் இருக்கிறது. கோகுலத்தில் உள்ள கோபியர்களின் வீட்டில் உள்ள வெண்ணெய் தாழியை உடைத்து, வெண்ணெயை திருடினார் கண்ணன். இதனால் கோபம் கொண்ட யசோைத, கிருஷ்ணரை, அங்கிருந்த உரலில் கயிற்றால் கட்டிப் போட்டார். உரலை இழுத்தபடியே அங்கிருந்து நகர்ந்து சென்ற கிருஷ்ணர், இரண்டு மரங்களுக்கு இடையே நுழைந்தார். உரல் அந்த இரண்டு மரங்களுக்கு இடையில் மாட்டிக் கொண்டது. கிருஷ்ணர் தன் பலத்தால் உரலை இழுக்க, இரண்டு மரங்களும் வேரோடு சாய்ந்தன. முன் காலத்தில் சாபத்தால் மரங்களாகி நின்ற தேவர்கள் இருவர் விமோசனம் பெற்ற லீலை அது. கிருஷ்ணரைக் கட்டிப் போட்ட உரலும் கோகுலத்தில் இருக்கிறது.

வாய்க்குள் உலகை காட்டிய கிருஷ்ணன்

ஒருநாள் பலராமர், அன்னை யசோதையிடம், 'கிருஷ்ணன் மண் சாப்பிட்டு விட்டான்' என்று புகார் கூறினார். பயந்து போன யசோதை, கிருஷ்ணரிடம் இதுபற்றி கேட்டதற்கு, 'தான் மண் சாப்பிடவில்லை' என்று கூறினார். உடனே யசோதை 'வாயைத் திறந்து காட்டு' என்று கிருஷ்ணரை வற்புறுத்தினார். தாயின் சொல்லுக்கு கட்டுப்பட்ட கிருஷ்ணரும், தன்னுடைய வாயைத் திறந்தார். அப்போது நிலம், நீர், நெரும்பு, ஆகாயம் அனைத்தையும் உள்ளடக்கிய அண்ட சராசரங்களும் அந்த கண்ணனின் வாய்க்குள் இருந்தது. அதுமட்டுமா, முழு பிரபஞ்சத்திற்குள், பிருந்தாவனத்தையும், அந்த பிருந்தாவனத்தில் தான் கிருஷ்ணரின் வாயைப் பார்த்துக் கொண்டிருப்பதையும் கண்டாள். குழப்படைந்த யசோதை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி, கிருஷ்ணரை தன் குழந்தையாகவே கொஞ்சத் தொடங்கினாள். இந்த லீலை நடந்தது யமுனை நதிக்கரையில். இந்த இடம் 'பிரம்மாண்ட படித்துறை' என்ற பெயரில் இன்றும் அழைக்கப்படுகிறது.

பலராமன் பிறப்பிடம்

நந்த பவனில் இருந்து பத்து நிமிட நடை தூரத்தில், ஜகந்நாதர் கோவில் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தின் அருகில் உள்ள ஒரு சிறிய குன்றின் மீது யோகமாயைக்கு ஓர் ஆலயம் இருக்கிறது. கிருஷ்ணரின் ஆணையை ஏற்று, யோகமாயை பலராமரை தேவகியின் கருவில் இருந்து ரோகிணியின் கருவிற்கு மாற்றியதை நாம் அறிவோம். இங்குள்ள இந்த சிறு குன்று பலராமரின் பிறப்பிடமாகவும் போற்றப்படுகிறது.

மிருதுவான மண்

நந்த பவனில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் ரமன்ரேத்தி என்ற இடம் உள்ளது. கிருஷ்ண-பலராமரின் திருப்பாதங்களுக்கு ஆனந்தம் தர விரும்பிய பூமாதேவி, விரஜ மண்டலத்தில் இருந்த மண் துகள்கள் அனைத்தையும் மிருதுவாக மாற்றினாள். அதிலும், இந்த ரமன்ரேத்தி என்னும் இடம் கிருஷ்ண-பலராமருக்கு மிகவும் பிரியமான விளையாட்டு மைதானமாகும். ஏனெனில், இங்கிருக்கும் மண் அவ்வளவு மிருதுவாக இருக்கும்.

மேலும் செய்திகள்