கும்பகோணம் மகாமக குளத்தில் தீர்த்தவாரி.. ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்
|மகாமக குள படித்துறையில் அஸ்திரதேவர்களுக்கு மஞ்சள், பால், சந்தனம் உள்ளிட்ட 21 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது.
கும்பகோணம்:
கும்பகோணத்தில் சோமசுந்தரி சமேத வியாழ சோமேஸ்வரர், அமிர்தவல்லி சமேத அபிமுகேஸ்வரர், விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர், ஞானாம்பிகா சமேத காளஸ்தீஸ்வரர், சவுந்தரநாயகி சமேத கவுதமேஸ்வரர் ஆகிய கோவில்களில் மாசிமக பெருவிழாவுக்காக அனுக்ஞை, விக்னேஸ்வரர் வாஸ்து சாந்தி பூஜைகள் கடந்த வாரம் நடந்தது. அதனை தொடர்ந்து அனைத்து கோவில்களிலும் மாசிமக விழாவானது கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் காலை, மாலை வேளையில் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிஉலா காட்சி நடந்தது. முக்கிய நிகழ்வான 5-ம் நாளில் ஒலைச்சப்பரமும், 7-ம் நாளில் திருக்கல்யாணமும், 9-ம் நாளான நேற்று முன் தினம் தேரோட்டம் நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி இன்று மகாமக குளத்தில் நடைபெற்றது. இதையொட்டி காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர், பாணபுரீஸ்வரர், அமிர்தகலசநாதர், கம்பட்டவிஸ்வநாதர், கோடீஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், நாகேஸ்வரர், சோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர் ஆகிய 11 சிவன் கோவில்களில் இருந்து சாமி-அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பட்டு, ரிஷப வாகனங்களில் மகாமக குளத்தின் நான்கு கரையில் எழுந்தருளினர்.
பின்னர் மகாமக குள படித்துறையில் அந்தந்த கோவிலின் அஸ்திரதேவர்களுக்கு மஞ்சள், பால், சந்தனம் உள்ளிட்ட 21 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. அஸ்திரதேவர்கள் நீராடியதைத் தொடர்ந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மகாமக குளத்தில் இறங்கி புனித நீராடினர்.
குளத்திற்குள் இறங்கி நீராட முடியாதவர்கள் கரையில் காத்திருந்தனர். அவர்களுக்கு ஷவர் அமைத்து அதன் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் சாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.