< Back
ஆன்மிகம்
திருச்செந்தூரில் மாசித் திருவிழா: பக்தர்கள் அலகு குத்தியும், பறவைகாவடி எடுத்தும் வழிபாடு
ஆன்மிகம்

திருச்செந்தூரில் மாசித் திருவிழா: பக்தர்கள் அலகு குத்தியும், பறவைகாவடி எடுத்தும் வழிபாடு

தினத்தந்தி
|
20 Feb 2024 12:30 AM IST

6-ம் திருநாளான நேற்று காலையில் மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் கோ ரதத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழாவில் பக்தர்கள் அலகு குத்தியும், பறவைகாவடி எடுத்தும் வழிபட்டனர். இன்று (செவ்வாய்க்கிழமை) சுவாமி சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கடந்த மாதம் 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 6-ம் திருநாளான நேற்று காலையில் மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் கோ ரதத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மாலையில் கீழ ரதவீதியில் உள்ள திருவாவடுதுறை ஆதீன மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது.

இரவில் சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளி தேரிலும், தெய்வானை அம்பாள் இந்திர விமானத்திலும் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

நேற்று கேரள மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்தனர். பெரும்பாலான பக்தர்கள் அலகு குத்தியும், புஷ்ப காவடி, சூரிய காவடி, பறவை காவடி எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.

7-ம் திருநாளான இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு உருகுசட்ட சேவை நடைபெறுகிறது. காலை 8.45 மணியளவில் சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளி, தூண்டிகை விநாயகர் கோவில் அருகில் உள்ள பிள்ளையன் கட்டளை மண்டபம் சேர்கிறார்.

மாலை 4.30 மணியளவில் சுவாமி சண்முகர், வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் தங்க சப்பரத்தில் செம்பட்டு அணிந்து, செம்மலர்கள் சூடி, செம்மேனியுடன் சிவப்பு சாத்தி கோலத்தில் சிவன் அம்சமாக எழுந்தருளி, வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

8-ம் திருநாளான நாளை (புதன்கிழமை) அதிகாலையில் சுவாமி சண்முகர் வெள்ளை சாத்தி கோலத்தில் வீதி உலா, மதியம் சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் வீதி உலா நடைபெறும்.

10-ம் திருநாளான வருகிற 23-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 11-ம் நாளான 24-ந்தேதி (சனிக்கிழமை) இரவு தெப்பத்திருவிழா நடக்கிறது.

மேலும் செய்திகள்