< Back
ஆன்மிகம்
மாரியம்மன் வழிபாடும் பலன்களும்
ஆன்மிகம்

ஒவ்வொரு நாளும் அன்னைக்கு உகந்த நாள்தான்..! மாரியம்மன் வழிபாடும் பலன்களும்

தினத்தந்தி
|
6 Aug 2024 2:17 PM IST

புதன் கிழமைகளில் விரதமிருந்து அம்மனை தரிசித்து வந்தால் அறிவுக் கூர்மை பெருகும் என்பது நம்பிக்கை.

சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வரும் நிலையில், அம்மனை வழிபடுவதற்காக மக்கள் வந்தவண்ணம் உள்ளனர். பெண்கள் விரதம் இருந்து அம்மனுக்கான வழிபாடுகளை செய்கின்றனர். இவ்வாறு ஆடி மாத வழிபாடு சிறப்புக்குரியதாக இருந்தாலும் அனைத்து நாட்களுமே அன்னையை வழிபடுவதற்கு உகந்த நாட்கள்தான்.

கிரகணத்தையே வென்ற தாய் என்பதால் அம்மனை எல்லாநாட்களிலும் விரதம் இருந்து வழிபடலாம். அவ்வகையில், ஒவ்வொரு நாள் விரதத்திற்கும் ஒவ்வொரு பலன்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. எந்த நாள் விரதத்துக்கு என்ன பலன்கள் என்பதை பார்ப்போம்.

ஞாயிற்றுக்கிழமை: இந்த நாளில் விரதமிருந்து வழிபட்டு வந்தால் வாழ்வில் முன்னேற்றம் காணலாம். மனதில் உள்ள பயம் நீங்கி அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

திங்கட்கிழமை: திங்கட்கிழமைகளில் விரதமிருந்து அம்மனை வழிபட்டு வந்தால் வாழ்வில் உள்ள இடையூறுகள் நீங்கி நன்மை பெறுவர். இந்த கிழமையில் அம்மனை வழிபட்டு வந்தால் உடல்நல குறைவில் இருந்து தப்பி நீண்ட ஆயுள் கிடைக்கும்.

செவ்வாய்க்கிழமை: செவ்வாய்க் கிழமைகளில் வழிபட்டு விரதமிருந்து வந்தால் குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் நீங்கி மங்கலம் உண்டாகும். பில்லி, சூனிய பிரச்சினைகளில் பாதிக்கப்பட்டவர்கள் இந்நாளில் விரதமிருந்து பலன் அடையலாம்.

புதன் கிழமை: புதன் கிழமைகளில் அம்மனை விரதமிருந்து தரிசித்து வந்தால் அறிவுக் கூர்மை பெருகும். இந்த கிழமையில் அம்மனை மனமுருகி வழிபட்டு வந்தால் மேன்மை அடையலாம்.

வியாழக்கிழமை: குரு அம்சம் நிறைந்த வியாழக்கிழமையில் அம்மனை விரதம் இருந்து வழிபட்டால் வாழ்வில் எதிரிகள் தொல்லைகள் உள்ளிட்ட அனைத்து தொல்லைகளும் நீங்கி சுகம் பெறுவர்.

வெள்ளிக்கிழமை: வெள்ளிக்கிழமைகளில் அம்மனை தரிசித்தால் வாழ்வில் எல்லா வளமும் பெறலாம்.

சனிக்கிழமை: வழக்குகளில் வெற்றி பெற, விரோதிகளின் தொந்தரவு நீங்கவும் அம்மனுக்கு சனிக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபடலாம்.

மேலும் செய்திகள்