காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா கோலாகலம்: மாங்கனிகளை வீசி பக்தர்கள் வழிபாடு
|காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழாவை முன்னிட்டு கட்டிடங்களில் இருந்து நேற்று மாம்பழங்களை வீசி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
காரைக்கால்,
63 நாயன்மார்களில் சிவபெருமானால் 'அம்மையே' என்றழைக்கப்பட்ட பெருமைக்குரியவர் காரைக்கால் அம்மையார். இவரது வாழ்க்கை வரலாற்றை நினைவு கூரும் வகையில் காரைக்கால் அம்மையார் கோவிலில் ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழா மிக விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, கடந்த 19-ம் தேதி மாலை மாப்பிள்ளை அழைப்புடன் இந்த ஆண்டுக்கான மாங்கனி திருவிழா தொடங்கியது. விழாவின் 2-ம் நாள் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் காரைக்கால் அம்மையார் கோவில் மண்டபத்தில், புனிதவதியாருக்கும், பரமதத்த செட்டியாருக்கும் திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 3-ம் நாளான நேற்று பிச்சாண்டவர் ஊர்வலம் மற்றும் மாங்கனி இறைப்பு நடந்தது. இதை முன்னிட்டு காரைக்கால் அம்மையார் கோவிலில் அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை பிச்சாண்டவர் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து, பவளக்கால் சப்பரத்தில் காவி உடை, ருத்ராட்சம் அணிந்து பிச்சாண்டவர் மூர்த்தியாக சிவபெருமான் தேரில் எழுந்தருளினார். இதையடுத்து வேதபாராயணத்துடன், வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
பிச்சாண்டவர் செல்லும் வீதியெங்கும் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றும் பொருட்டு, வீட்டு வாசல்கள் மற்றும் மாடிகளில் இருந்தபடி மாங்கனிகளை வாரி இறைத்தனர். இந்த மாங்கனிகளை உண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமண தடை நீங்கும் என்பது ஐதீகம். அதனால் விழாவில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் போட்டி போட்டுக் கொண்டு மாம்பழங்களை பிடித்தனர்.
வீதியுலா வந்த பிச்சாண்டவருக்கு மாங்கனி, பட்டு வஸ்திரங்களை படைத்தும் பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து காரைக்கால் பெருமாள் வீதி, பாரதியார் வீதி, கென்னடியார் வீதி, மாதா கோவில் வீதி, லெமேர் வீதி வழியாக சென்று மீண்டும் பாரதியார் வீதி வழியாக இரவு காரைக்கால் அம்மையார் கோவிலை பவளக்கால் சப்பரம் வந்தடைந்தது.
தேரோட்டத்தில் புதுச்சேரி சபாநாயகர் செல்வம், அமைச்சர் திருமுருகன், கலெக்டர் மணிகண்டன் மற்றும் காரைக்கால், புதுச்சேரி, தமிழக பகுதிகளில் இருந்து வந்து லட்சக்கணக்கான பக்தர்கள் காரைக்கால் அம்மையாரை தரிசித்தனர். நேற்று மாலை காரைக்கால் அம்மையார் பிச்சாண்டவரை எதிர்கொண்டு அழைத்துச் சென்று மாங்கனியுடன் அமுது படைத்தார்.